ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேசத்துரோக கோஷம் எழுப்பியதாக திரிக்கப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு 20 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட கன்னையா குமார் பெயிலில் வெளிவந்த பிறகு ஜேஎன்யு வளாகத்தில் ஆற்றிய உரை. அரசியல் தெளிவும், ஆழமான சிந்தனையும் கொண்ட உரை வேகமாய் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியில் இருக்கும் உரை தமிழர்கள் பலருக்கும் புரியாது என்பதால்  திரு. ஷாஜஹான் அவர்களின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.
a
 
““அனைத்துக்கும் முதலாக ஜேஎன்யு மக்களுக்கு – மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், செக்யூரிடி ஊழியர்கள், கடைக்காரர்கள், கடைகளின் ஊழியர்கள் அனைவருக்கும் புரட்சிகர வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே இருக்கும் ஊடகங்களின் வாயிலாக நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உலகின் மூலை முடுக்குகளிலிருந்து ஆதரவளித்த மாணவர்கள்,அறிஞர்கள், திரைப்படத் துறையினர் அனைவருக்கும் நன்றி. ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்துக்கு ஆதரவாக நின்ற அனைவருக்கும் நன்றி. ஜேஎன்யுவை காக்கவும், ரோகித் வெமுலாவுக்கு நீதி கிடைக்கவும் துணையாக நிற்கும் ஊடகத்துறையினர், குடிமை சமூகத்தினர், அரசியல் சார்புள்ளவர்கள்,சார்பற்றவர்கள் அனைவருக்கும் என் நன்றியும் செவ்வணக்கத்தையும் உரித்தாக்குகிறேன்.
பெருமைக்குரிய நாடாளுமன்றத்தில் அமர்ந்து கொண்டு, எது சரி, எது தவறு என்று தமக்கு மட்டுமே தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிற கனவான்களுக்கும் நன்றி. அவர்களுடைய காவல்துறைக்கும்,தொலைக்காட்சி சேனல்களுக்கும் நன்றி. ஜேஎன்யு மீது அவதூறு பரப்புவதாகத்தான் இருந்தது என்றாலும்கூட, அவர்களால்தான் ஜேஎன்யு-வுக்கு பிரைம் டைம் ஒளிபரப்புகளில் இடம் கிடைத்தது
எனக்கு யார்மீதும் வெறுப்பு கிடையாது. குறிப்பாக ஏபிவிபி மீது கிடையாது. ஏனென்றால், ஜேஎன்யுவில் இருக்கும் ஏபிவிபி என்பது நாட்டின் இதர பகுதிகளில் இருக்கும் ஏபிவிபியைவிட பகுத்தறிவில் மேம்பட்டது. அரசியல் வித்தகர்கள் என்று கருதிக்கொள்ளும் அறிவாளிகளுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள வேண்டும். கடந்த ஜேஎன்யு மாணவர் தேர்தலின்போது, ஏபிவிபியின் முக “புத்திசாலியான” வேட்பாளரை நான் எவ்வாறு எதிர்கொண்டு அவருக்குத் தண்ணீர் காட்டினேன் என்று அவர்களே வீடியோவில் பார்த்துக்கொள்ளட்டும். ஆக, இங்கே இப்படி என்றால் நாட்டின் இதர பகுதிகளில் ஏபிவிபியின் நிலை எப்படியிருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம். எனக்கு ஏபிவிபி மீது எந்தவித வெறுப்புணர்வும் கிடையாது. ஏனென்றால், நாங்கள் ஜனநாயகத்தை விரும்புகிறவர்கள், அரசமைப்பை உண்மையிலேயே நம்புகிறவர்கள். எனவேதான் ஏபிவிபியை எதிர்க்கட்சியாகத்தான் பார்க்கிறோமே தவிர,எதிரிகளாக அல்ல. ஏபிவிபி நண்பர்களே, உங்கள்மீது பழிவாங்கும் விதத்தில் ஏதும் செய்துவிட மாட்டேன்,நீங்கள் அதற்குத் தகுதி உள்ளவர்களும் அல்ல. வேட்டைக்காரன்கூட வேட்டைக்குத் தகுதி உடையதைத்தான் வேட்டையாடுவான் இல்லையா?
இப்போது நடந்திருக்கும் விஷயத்தில் ஜேஎன்யு தான் யார் என்பதைக் காட்டியிருக்கிறது. எது சரி எது தவறு என்பதைக் காட்டியிருக்கிறது. அதற்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சரியானதை சரி என்றும் தவறை தவறு என்றும் சொல்வதற்காக நாம் இங்கே நின்று கொண்டிருக்கிறோம்.சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இது தன்னெழுச்சியாக – ஸ்பான்டேனியஸாக எழுந்த எதிர்வினை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், அவர்களுடைய முயற்சிகள் எல்லாம் முன்னரே திட்டமிட்டவையாக இருந்தன. நம்முடைய எதிர்வினைகளோ, எந்தத் திட்டமிடலும் இல்லாமல் தன்னிச்சையாக எழுந்தவை.
இந்த நாட்டின் அரசமைப்பில், இந்த நாட்டின் சட்டத்தில், இந்த நாட்டின் நீதியமைப்பின்மீது எமக்கு நம்பிக்கை இருக்கிறது. அதே சமயத்தில், மாற்றம் ஒன்றே மாறாதது என்பதிலும் நம்பிக்கை இருக்கிறது. ஆகவே, மாறும், மாறியே தீரும், நாம் மாற்றத்தின் பக்கம் நிற்கிறோம், இந்த மாற்றம் நடந்து கொண்டே இருக்கும். நமது அரசமைப்பின்மீது நம்பிக்கை இருக்கிறது. அரசமைப்பின் முன்னுரையில் கூறப்பட்டிருக்கிற இலட்சியங்களின்மீது நம்பிக்கையுடன் சொல்கிறோம். அதில் கூறப்பட்டுள்ளதே – சோஷலிசம், மதச்சார்பின்மை, சமத்துவம் – அதன் பக்கத்தில் நிற்கிறோம்.
aa
நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன் – நான் இன்று உரையாற்றப் போவதில்லை. இன்று என் அனுபவத்தை மட்டுமே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். ஏனென்றால், முன்னர் எல்லாம் நான் படிப்பது அதிகமாகவும், அமைப்புமுறையை – சிஸ்டத்தைக் கேள்வி கேட்பது குறைவாகவும் இருந்தது. இந்த முறை, படிப்பு குறைவாகவும் கேள்வி கேட்பது அதிகமாகவும் இருந்தது. அந்த அனுபவத்தில் சொல்கிறேன். ஜேஎன்யுவில் மாணவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள். அவர்களிடம் பிரைமரி டேட்டா இருக்கிறது. நிறைய தகவல்கள் இருக்கின்றன.
முதலாவதாக ஒன்றைச் சொல்ல வேண்டும் – விஷயம் நீதிமன்றத்தில் இருக்கிறது, அதைப்பற்றி நான் ஏதும் சொல்லப்போவதில்லை. ஒரே ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். இந்த நாட்டின் அரசமைப்பின்மீது நம்பிக்கை கொண்டுள்ளவர்கள், பாபாசாகேப் அம்பேத்கரின் கனவை நனவாக்க விரும்புகிறவர்கள், இந்த வார்த்தைகள் போதும் என்று நினைக்கிறேன், புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்து விடும். சப்-ஜுடிஸ் விஷயத்தில் நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை.
பிரதம மந்திரி ட்வீட் செய்தார். அவர் சொன்னார் – சத்யமேவ ஜெயதே. பிரதமர் அவர்களே… உங்கள் கருத்துகளோடு எனக்கு பல விஷயங்களில் பெரும் வேறுபாடு உண்டு. இருந்தாலும், சத்யமேவ ஜெயதே உங்களுடையது அல்ல. அது இந்த நாட்டுக்குச் சொந்தமானது, அரசமைப்பில் உள்ளது. எனவே நானும் சொல்கிறேன் சத்யமேவ ஜெயதே. ஆமாம், உண்மை வெல்லும்.
இந்தப் போராட்டத்தில், மக்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொண்டு என் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். அந்த விஷயம் என்னவென்றால், தேசத்துரோகம் என்பது மாணவர்கள் மீது அரசியல் கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று மட்டுமே நினைத்து விடாதீர்கள்.
நானும் கிராமத்திலிருந்து வந்தவன். ஊரிலிருந்து வரும்போது ரயில்வே ஸ்டேஷனில் வித்தை காட்டப்படுவதுண்டு. மந்திரவாதி வித்தை காட்டுவான். அவன் வித்தை காட்டுவது மட்டுமல்ல,மோதிரத்தையும் விற்பான். மனசுக்குப் பிடித்த மந்திர மோதிரம். அந்த மந்திர மோதிரத்தை அணிந்தால் உங்கள் நோக்கங்கள் எல்லாம் நிறைவேறும் என்று சொல்லுவான்.
அதேபோலத்தான் நம் நாட்டில் கொள்கை வகுப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். கறுப்புப்பணம் வரும் என்றார்கள். ஹர் ஹர் மோதி என்றார்கள். விலைவாசி குறையும் என்றார்கள்கள். சப்கா சாத், சப்கா விகாஸ்… அந்த வெற்றுச் சவடால்கள் (தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் வெறும் ஜும்லா என்று கட்சித் தலைவரே சொல்லி விட்டார் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளவும்) எல்லாம் மக்களின் மனதில் இப்போதும் இருக்கிறது. இந்தியர்களாகிய நமக்கு எதையும் எளிதில் மறந்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த முறை அவர்கள் நடத்திய நாடகம் மிகப் பெரியது, எனவே மக்களால் மறக்க முடியவில்லை. அதனால்தான் இந்தச் சவடால்களை மறக்கடித்துவிட வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.
ஆராய்ச்சி செய்யும் ஸ்காலர்களுக்கு ஃபெல்லோஷிப் நிறுத்தி விடுவோம் என்று சொல்வார்கள். அப்போது ஸ்காலர்கள் என்ன செய்வார்கள்? பெல்லோஷிப் தொடர வேண்டும் என்று கேட்பார்கள். உடனே அவர்கள் சொல்வார்கள் – சரி போகட்டும், 5,000 அல்லது 8,000 பெல்லோஷிப் தொடரும் என்பார்கள். ஆக,உயர்த்துவது பற்றிய கேள்வி மறந்து போகும். பெல்லோஷிப் தொகையை உயர்த்த வேண்டும் என்று கேட்டது ஜேஎன்யு. எனவே, உங்களுக்கு பெல்லோஷிப் தொகை கிடைக்கிறது என்பதற்காக உங்கள்மீது அவதூறு சுமத்தப்பட்டால் அதற்காக வருத்தப்படாதீர்கள். (உப்புத் தின்றால் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டியிருக்கும்.)
இந்த நாட்டில் மக்கள் விரோத அரசு ஆட்சியில் இருக்கிறது. அரசுக்கு எதிராக நீங்கள் குரல் கொடுத்தால்,அரசின் சைபர் செல் திரிக்கப்பட்ட வீடியோவை அனுப்பி வைக்கும், உங்கள் மீது வசைமொழிகளை வீசும்,உங்கள் குப்பைக்கூடையில் எத்தனை காண்டம்கள் என்றும்கூட எண்ணப்படும்! இது நமக்கு கடுமையான நேரம், நாம் தீவிரமாக யோசிக்க வேண்டிய நேரம். ஜேஎன்யு மீதான தாக்குதல் திட்டமிட்ட தாக்குதல் என்பதை நாம் தீவிரமாக உணர்ந்து கொள்ள வேண்டிய நேரமிது. ஏனென்றால், Occupy UGC இயக்கத்தை சட்டவிரோதமாக்குவது அவர்களுடைய திட்டமிட்ட தாக்குதலின் நோக்கமாக இருக்கிறது. ரோகித் வெமுலாவுக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டத்தை அடக்குவது அவர்களுடைய திட்டமிட்ட தாக்குதலின் நோக்கமாக இருக்கிறது.”
(தொடரும்..)