டெல்லி: நீதிமன்றங்கள் நீண்ட விடுமுறை எடுப்பது நீதி கேட்பவர்களுக்கு சிரமமாக உள்ளது என நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்துள்ளார். நீதிமன்றத்துக்கும் மத்தியஅரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், மத்திய சட்ட அமைச்சர் உச்சநீதிமன்ற விடுமுறை குறித்து பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
‘தாமதமாகும் நீதி, மறுக்கப்படுவதற்கு சமம்’ என்பர். ஆனால் தற்காலங்களில் நீதிமன்ற தீர்ப்புகளும் விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. நமக்கு தெரிந்தவரையில், அதிமுக பொதுக்குழு வழக்கை எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு நீதிமன்றமும், ஒவ்வொரு நீதிபதியும் வெவ்வேறு வகையான தீர்ப்புகளை வழங்கி வருகின்றனர். சட்டம் அனைவரும் சமம் என்று கூறும்போது, தீர்ப்புகள் மட்டும் மாறுவது ஏன் என்ற விமர்சனங்களும் கேள்விகளும் எழுகின்றன. இந்த நிலையில், நீதிமன்றங்கள் விடுமுறை எடுத்துக்கொள்வதும் விவாதிக்கப்பட வேண்டிய பொருளாக கருதப்படுகிறது.
இந்திய உச்சநீதிமன்றம், ஓராண்டில், 222 நாட்கள் மட்டுமே வேலை செய்கிறது. பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை, கோடை விடுமுறை விடப்படுவதுபோல், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிம ன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால் பல வெளிநாடுகளில் உச்சநீதிமன்றத்திற்கு இந்த அளவுக்கு விடுமுறை கிடையாது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு, ஓராண்டில், 10 நாட்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்படுகிறது. இந்தியாவில்தான் நீதிமன்றத்துக்கு அதிக நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் வழக்குகளின் விசாரணை பாதிக்கப்படுகிறது.
இது குறித்த விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில், இது தொடர்பாக விவாதித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்றங்கள் நீண்ட விடுமுறை எடுப்பது நீதி கேட்பவர்களுக்கு சிரமமாக இருப்பதாக மக்கள் கருதுவதாக சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்துக்கும் உயர்நீதிமன்றங்களுக்கும் தற்போது கொலீஜியம் முறையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. இதில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. இந்த ஆணையத்தை கடந்த 2015ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ,‘ நீதிமன்றங்களுக்கு நீண்டநாள் விடுமுறை அளிக்கப்படுவதால், நீதி கோருபவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதாக வேதனை தெரிவித்தார். நீதி கோரி வருவோருக்கு நீதிமன்றத்தின் நீண்ட விடுமுறை காலம் ஏற்புடையதாக இல்லை என்ற எண்ணம் மக்களிடையே நிலவுகிறது என மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தாா். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற குளிர்கால விடுமுறை இன்று தொடங்கி உள்ளது. இதனால், 2 வாரங்களுக்கு எந்த அமர்வும் செயல்படாது’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். இதனால் இந்தவிவகாரம் மேலும் பேசும்பொருளாக மாறி வருகிறது.
தேசிய நீதித் துறை தகவல் மையத்தின் கணக்குப்படி, இந்தியாவில், மாவட்டம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில், 3.30 கோடி வழக்குகள் தேங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இவற்றில் 1.86 கோடிக்கும் அதிகமாக வாக்குகள் ஆண்டை கடந்தும் நிலுவையில் உள்ளன. அதுபோல தமிழகத்தில், உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில், 17.57 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன. மாவட்ட நீதிமன்றங்களில், 11 லட்சத்து, 85 ஆயிரத்து, 258 வழக்குகளும், சென்னை உயர் நீதிமன்றத்தில், ஐந்து லட்சத்து, 72 ஆயிரத்து, 540 வழக்குகளும் முடங்கியுள்ளன. இந்த வழக்குகளை விரைந்து தீர்ப்பதில் நீதிபதிகளோ, நீதிமன்றங்களோ ஆர்வம் காட்டுவதில்லை. நிதி வசதி பெற்றவர்களுக்கு ஆதரவாகவே நீதிமன்றங்களும் செய்லபடுவதாக கூறப்படுகிறது. இதனால்தான் வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு நீதிபதிகளும் துணைபோவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதுமட்டுமின்றி, நீதிபதிகளின் நியமனத்தில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், நீதிபதிகளின் குடும்பத்தினரே தொடர்ந்து நீதிபதிகளாக பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி பல நீதிபதிகள், அரசியல் மற்றும் ஜாதி, மதம் ரீதியில் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாகவும் புகார்கள் உள்ளன. இதனால் நீதிமன்றங்களின் மாண்பு குறைந்து வருகிறது.
அதே வேளையில் நீதிமன்றங்களிலும் நீதிபதிகளின் எண்ணிக்கை முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளது. அதுபோல லோக் அதாலத் போன்ற அமைப்புகளும் பல மாநிலங்களில் செயல்படாத நிலை தொடர்கிறது. மக்களிடையே எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடும் வழக்கம் அதிகரித்து உள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான் ஆனால், இதில் இதில் பலரது நோக்கம், தங்களுக்கு எதிரான நடவடிக்கையை தள்ளிபோடும் சாமர்த்தியமாகவே இதுபோன்ற நடவடிக்கைகள் கருதப்படுகிறது.
இதனால், நீதிமன்றங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என, சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. கூடுதலாக, நீதிபதிகளை நியமிக்கும் பட்சத்தில், கீழமை நீதிமன்றங்களில் ஓராண்டிற்கு வரும் புதிய வழக்குகள் அனைத்தையும் தீர்க்க முடியும். ‘அத்துடன், மேலும், 8,152 நீதிபதிகளை நியமித்தால், அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து வழக்குகளையும் முடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணும் வகையில், மாற்று திட்டங்களையும், இந்தியா ஆராய வேண்டும் என யோசனை தெரிவித்து உள்ளது.
அதுபோல ‘ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகளை, உயர் நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளாக நியமித்தால், வழக்குகள் தேக்கத்தை குறைக்கலாம்,” என, உச்ச நீதிமன்ற நீதிபதி, டி.ஒய்.சந்திரசூட் யோசனை தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தின், 224ம் சட்டப் பிரிவு, தற்காலிக நீதிபதிகள் நியமனத்திற்கு வகை செய்கிறது. அதனால், உயர் நீதிமன்றங்களில், கூடுதல் நீதிபதிகளை நியமித்து, வழக்குகள் தேங்குவதை குறைக்கலாம் என்றும் தலைமை நீதிபதி கூறியிருக்கிறார்.
அதனால், இந்த விஷயத்தில் மத்தியஅரசு, உச்சநீதிமன்றம், சட்ட வல்லுநர்கள் இணைந்து, அதற்கான ஒரு குழுவை அமைத்து, கலந்தாலோசித்து, வழக்குகளின் தேக்கத்தை குறைக்கவும், விடுமுறை தினங்களை குறைத்து, வழக்குகளில் வாய்தா கொடுக்காமல் விரைந்து தீர்வு காண முன்வரவேண்டும், மேலும் பல சட்டங்களை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளதால் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய தேவையை கருத்தில் கொண்டு, யார் பெரியவர் என்ற போட்டி மனப்பான்மையை கைவிட்டு, நாட்டின் வளர்ச்சிக்கும், நாட்டு மக்களின் உரிமைக்காக மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.