சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை, தொன்மையான திருக்கோயில் களை அதன் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொண்டு வருவதோடு, திருவிழாக்கள் காலங்களில் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்திட தேவையான முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். பின்னர், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதல்வர் அவர்கள், பக்தர்கள் அதிகமாக வருகின்ற திருத்தலங்களில் அவர்கள் எளிய முறையில் தரிசனம் செய்திட ஏதுவாக அத்திருக்கோயில்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி இன்றைக்கு அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் 02.01.2023 அன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், நெரிசல் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்வதற்கு உண்டான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஆய்வு செய்தோம். அந்த வகையில் திருக்கோயிலின் மாடவீதியை சுற்றி வாகனங்களை அனுமதிப்பது இல்லை என்றும், முக்கிய பிரமுகர்கள் மாட வீதியில் 50 மீட்டர் தூரம் நடந்து வந்து இறை தரிசனம் செய்வதற்கும், ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதியோர் மற்றும் உடல் நலிவுற்றோருக்காக பேட்டரி கார் மற்றும் வீல் சேர்கள் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் வரிசை முறையினை நீட்டித்து எவ்வித சச்சரவுமின்றி பக்தர்கள் அதிக அளவிற்கு விரைவில் தரிசனம் செய்திட திட்டமிட்டு இருக்கின்றோம். வாகனத்தில் வருபவர்கள் தங்களது வாகனங்களை பி.வி.நாயகன் தெரு, எம்.கே.டி மேல்நிலைப்பள்ளி சாலை, பெசன்ட் ரோடு, சுங்குவார் தெரு ஆகிய இடங்களில் பார்க்கிங் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, திருக்கோயில்களில் சிறப்பு தரிசனக் கட்டணத்தை முழுமையாக இரத்து செய்ய நோக்கமிருந்தாலும், திருக்கோயிலின் பொருளாதார நிலை சூழ்நிலையை கருதி சிறப்பு தரிசன கட்டணங்களை படிப்படியாக குறைத்து வருகிறோம்.
நல்ல பொருளாதார நிலையிலுள்ள சில திருக்கோயில்களில் முழுமையாக அந்த கட்டணத்தை ரத்து செய்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளாக அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு தரிசனத்திற்கு ரூபாய் 200 கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த முறை அக்கட்டணத்தை 100 ரூபாயாக குறைக்க உத்தரவிட்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் அதிகமாக வருகின்ற வைணவ திருக்கோயில்களில் இதுபோன்ற ஒருங்கிணைந்த கூட்டங்களை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கந்த சஷ்டிவிழா, திருவண்ணாமலை கார்த்திகை தீபப் பெருவிழா போன்றவற்றில் லட்சோப லட்சம் மக்கள் கூடினாலும், எவ்வித அசொளகரியமின்றி, பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதோ, அதேபோன்ற அனைத்து வசதிகளும் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கும் செய்து தரப்படும். திருக்கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்திட எவ்வித தவறும் நடைபெறா வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி ஏதேனும் தவறுகள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுவாக, சிறப்பு தரிசன கட்டணத்தை பொறுத்தளவில் அவற்றை முழுமையாக இரத்து செய்ய படிப்படியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
ஏற்கனவே நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயிலில் முழுமையாக சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், துறைசார்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் எந்தெந்த திருக்கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணத்தை ரத்து செய்யலாம் என கருத்துரு கோரப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அந்தந்த திருக்கோயிலின் பொருளாதார சூழ்நிலைக்கேற்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். செய்தியாளர் கோரிய திரு.பொன்மாணிக்க வேல் அவர்களின் புகார் குறித்து துறை சார்பில் அறிக்கை கேட்டிருக்கின்றோம். அவ்வறிக்கை பெற்றவுடன் விளக்கம் ஊடகங்களுக்கு தரப்படும். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரையில் 400 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
மேலும், தமிழக முதல்வர் அவர்களின் திருக்கரங்களால் 1250 கிராமப்புற திருக்கோயில்களுக்கும், 1250 ஆதிதிராவிடர் திருக்கோயில்களுக்கும் ஆகமொத்தம் 2500 திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள தலா 2 இலட்சம் ரூபாய் வீதம் நிதியுதவி விரைவில் வழங்கப்படவுள்ளது. சிஎம்டிஏ வை பொறுத்தளவில் கடந்த ஆட்சியில் இருந்ததை விட இந்த ஆட்சியில் முழுமையாக தவறுகள் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன. தவறுகள் நடைபெறக்கூடாது என்பதற்காகத்தான் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. முதலமைச்சர் அறிவுரையின்படி, தற்போது செயல்பாட்டில் இருக்கின்ற நடைமுறையில் இன்னும் என்னென்னல்லாம் மாற்றங்களை செய்தால் விரைவாக பணிகள் நடைபெறுவதற்கு உதவியாக இருக்கும் என்பதை ஆலோசித்து அம்மாற்றங்களை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோன்று சி.எம்.டி.ஏ வில் இடைத்தரகர்களின் கொட்டம் அடக்கப்படும். அனைவரும் சமம், அனைத்தும் சமம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. ஆகவே, இதுபோன்ற தவறான செயல்பாடுகளை முழுமையாக தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வின் போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., துணை ஆணையர் / செயல் அலுவலர் திருமதி கவெனிதா, காவல் உதவி ஆணையர் திரு.சார்லஸ் சாம் ராஜதுரை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.