நாமக்கல்: நாமக்கலில் மாவட்டத்தில் இருந்து முதன்முறையாக மலேசியாவுக்கு முட்டை ஏற்றுமதிக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து, இன்று விமானத்தில் மலேசியாவுக்கு முட்டை அனுப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு கலந்துகொண்டு, கொடியசைத்து ஏற்றுமதியை தொடங்கி வைக்கிறார்.
நாமக்கல் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடு களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது, உலககோப்பை கால்பந்து போட்டி எதிரொலியாக, ஐக்கிய அரபு நாடான கத்தாருக்கு மாதம் ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகள் 50லட்சத்தில் இருந்து 2 கோடியாக அதிகரிகக்கப்பட்டு உள்ளது. இது மேலும் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த முட்டைகள், 30 கன்டெய்னர்கள் மூலம் கத்தாருக்கு அனுப்பப்படுகின்றன. உலககோப்பை கால்பந்து போட்டியைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் இருந்து மாதந்தோறும் கத்தாருக்கு மட்டும் நாமக்கல்லில் இருந்து 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்று மடங்கு அதிகமாக 1.50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இது மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது மலேசியாவுக்கும் முட்டை ஏற்றுமதி செய்ய ஆர்டர்கள் கிடைத்துள்ளன. இதனால் முட்டை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மலேசியர்களின் உணவில் முக்கிய இடம் பெறுவது சிக்கனும் முட்டையும் தான். ஆனால், கடந்த சில மாதங்களாக அங்கு முட்டைத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இது அங்கு புதிதாக பிரதமராக பதவியேற்ற அன்வர் இப்ராஹிம் தலைமையிலான அரசுக்கு மிகப்பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டு அரசு, கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதகத்திடம், இந்தியாவிலிருந்து முட்டையை இறக்குமதி செய்ய உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சரசரவென களத்தில் இறங்கிய அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள், டெல்லியில் உள்ள உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்திற்கு தகவலை பாஸ் செய்துள்ளனர். அங்கிருந்து, சென்னையில் உள்ள விலங்கு தனிமைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவைகள் அமைப்புக்கு இந்த தகவல் கிடைத்த நிலையில், துரிதமாக செயல்பட்டு நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்களிடம் இருந்து, மலேசியாவுக்கான முட்டை ஏற்றுமதி ஆர்டர் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏற்றுமதிக்கான முதல் கன்சைன்மெண்ட் 2 லட்சம் முட்டைகளுடன் இன்று மாலை 5 மணிக்கு திருச்சியிலிருந்து விமானம் மூலம் கிளம்ப உள்ள நிலையில், தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து ஏற்றுமதியை தொடங்கி வைக்க உள்ளார்.
அதன்படி வாரம் சுமார் 54,000 முட்டைகள் அனுப்பப்பட உள்ளது. தொடர்ந்து வரும் ஆர்டர்களை பொருத்து வாரந்தோறும் 20 கண்டெய்னர்கள் மூலம் 1 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட வாயப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலக கோப்பை கால்பந்து: கத்தாருக்கு 50லட்சத்தில் இருந்து 2 கோடியாக உயர்ந்த நாமக்கல் முட்டை ஏற்றுமதி!