மதுரை: தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாட்டில் விளையாட்டுக்களை ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டு ஆணையத்திற்கு 97 பயிற்சியாளர்களை நியமிக்க உத்தரவிட்டு உள்ளார்.
தமிழகஅரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையங்கள் வருகின்றன. அந்த வகையில் சென்னை, மதுரை உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையங்கள் மைதானம் மற்றும் விளையாட்டு விடுதிகளுடன் இயங்கி வருகிறது. இதில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்களே இல்லை. இதனால் பல விளையாட்டுகளில் தமிழ்நாடு அணிகள் தோல்வியையே சந்தித்து வந்தன. மேலும் விளையாட்டுக்கள் ஊக்குவிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன் பல முயற்சிகளை எடுத்து விளையாட்டுத்துறை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். அதன் எதிரொலியாக செஸ் ஒலிம்பியாட் உள்பட பல்வேறு போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பயிற்சியாளர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
இந்த, புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் 97 பயிற்சியாளர்களை நியமிக்கும் ஆணைக்கு கையெழுத்திட்டார். இதையடுத்து வில் அம்பு பயிற்சியாளர், தடகளம் (ஸ்பிரின்ட்ஸ்), உயரம் தாவுதல், ஈட்டி எறிதல், பாரா தடகளம், குத்துச்சண்டை, கூடைப்பந்து, கத்திச்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, ஹாக்கி, ஜூடோ, கபடி, கோகோ, நீச்சல்(டைவிங்), டேக்வாண்டோ, டென்னிஸ் மற்றும் சாப்ட் டென்னிஸ், வாலிபால், பளு தூக்குதல் மற்றும் மல்யுத்த பயிற்சியாளர்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.