சென்னை: சேலம் பால் பண்ணை வளாகத்தில் 12.26 கோடி ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 6,000 லிட்டர் உற்பத்தித் திறன்கொண்ட புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில், சேலம் பால் பண்ணை வளாகத்தில் 12.26 கோடி ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 6,000 லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலையையு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.12.2022) தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.12.2022) தலைமைச் செயலகத்தில், ஆவின் நிறுவனத்தின் சார்பில், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் பயன்பெறும் வகையில் சேலம் பால் பண்ணை வளாகத்தில் 12.26 கோடி ரூபாய் செலவில் அதிநவீன தொழில் நுட்பத்தில் நிறுவப்பட்டுள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலையைத் திறந்து வைத்தார். ஆவின் நிறுவனம், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் கிராம அளவில் 9367 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது.
ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 30 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்திய அளவில் பால் கூட்டுறவு அமைப்புகளின் கீழ் பால் கொள்முதலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் உப பொருட்களான நெய், பால்பவுடர், பனீர், வெண்ணெய், பால்கோவா, தயிர், மோர், லஸ்ஸி, யோகர்ட், நறுமணப் பால் வகைகள், இனிப்புகள், ஐஸ்கிரீம், குல்பி, சாக்லேட் மற்றும் குக்கீஸ் வகைகள் நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றது.
அம்பத்தூர் பால் உப பொருட்கள் பண்ணையில் நாள் ஒன்றுக்கு 15,000 லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தித்திறனுடன் சுமார் 84 பால் உபபொருட்கள், 146 வகைகளில் தயாரித்து அனைத்து மாவட்டங்களில் உள்ள நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்து வருகின்றது.
மதுரையில் நாள் ஒன்றுக்கு 30,000 லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட புதிய ஐஸ்கிரிம் தொழிற்சாலை 14.3.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. அதன்மூலம், பல்வேறு வகை சுவைகளில் குல்பி ஐஸ்கிரீம், கோன் ஐஸ்கிரீம் மற்றும் கப் ஐஸ்கிரீம் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு, அதனை தென் மாவட்டங்களில் உள்ள நுகர்வோர்களுக்கு தடையின்றி வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, வளர்ந்து வரும் ஐஸ்கீரிம் சந்தையில் ஆவின் பங்களிப்பை அதிகப்படுத்தும் விதமாகவும், கூடுதல் லாபம் ஈட்டி பால் உற்பத்தியாளர்களின் நலன் பேணவும், சேலம் பால் பண்ணை வளாகத்தில் ரூ.12.26 கோடி செலவில் நாள் ஒன்றுக்கு 6000 லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட அதிநவீன தொழில் நுட்பத்தில் நிறுவப்பட்டுள்ள ஐஸ்கிரீம் தொழிற்சாலையை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
இப்புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை வாயிலாக, 50 மி.லி., 100 மி.லி., 500 மி.லி., 1 லிட்டர் அளவுகளிலும் மற்றும் நுகர்வோர்களுக்கு தேவைக்கேற்ற அளவுகளிலும் ஐஸ்கிரீம் சிப்பமிடும் வசதிகளுடன், பல்வேறு வகை சுவைகளில் கோன் ஐஸ்கிரீம் மற்றும் கப் ஐஸ்கிரீம் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு, அவை அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் மூலம் நுகர்வோர்களுக்கு தரமாகவும் தடையின்றியும் வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை முதன்மை செயலாளர் ஆ. கார்த்திக் இ.ஆ.ப., பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் ந.சுப்பையன் இ.ஆ.ப., ஆவின் இணை மேலாண்மை இயக்குநர் கே.எம். சரயு, இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.