சென்னை:  மழை பாதிப்பு தொடர்பான ஆய்வு சென்ற  முதல்வர் மு.க.ஸ்டாலினின் கான்வாய் வாகனத்தில் சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தொங்கியபடி பயணம் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து, சென்னை  காசிமேடு பகுதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய சென்றார்.   அப்போது அவரது கான்வாய் வாகனத்தில் சென்னை மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எபனேசர், இளைய அருணா உள்பட சிலர் தொங்கியபடி பயணித்தனர். இந்த செயல் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

சென்னை மாநகராட்சியின் தலைவராக, சென்னை மாநகர மக்களின் தலைவராக உள்ள ஒருவர், கான்வாய் வாகனத்தில் தொடங்கியது படி பயணம் செய்வது, அவரது பதவிக்கும், அந்தஸ்துக்கும் மரியாதை இல்லை என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதுபோல, திறமையான அதிகாரியாகன ககன்தீப் சிங் பேடி, பேடித்தனமாக வாகனத்தில் தொங்கியபடி சென்றும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

பள்ளி, கல்லூரி மாணவர்களே பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படி பயணம் செய்யக்கூடாது என கூறப்பட்டு வரும் நிலையில், பொறுப்புமிக்க மாநகர மேயரும், அதிகாரியும் புட்போர்டு அடித்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், அரசியல் கட்சியினரும் கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில், சமூக ஆர்வலர் செல்வகுமார் என்பவர், மேயர் பிரியா, ஆணையர் பேடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையதளம் மூலமாக புகார் அளித்துள்ளார்.  அவரது புகார் மனுவில், வாகனத்தில் தொங்கியபடி  பயணம் செய்தது தொடர்பாக சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளதுடன், மத்திய மோட்டார் வாகன சட்டம் 1988-ன் 93-வது பிரிவின் கீழ் குற்றம் என்றும், அவர்களின் செயல்  சட்ட சட்டவிரோதமான செயல்தான் எனவே இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதற்கிடையில், மேயர் பிரியா மற்றும் பேடியின் சட்ட விரோ மற்றும் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரது வாகனத்தில் மறைந்த மூத்த அதிமுக தலைவர் எஸ்.டி.சோமசுந்தரம் வேஷ்டி அவிழ்ந்து தொங்கிய நிலையில், தொங்கியபடி பயணம் சென்றது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த நடவடிக்கை தொடர்பாக திமுகவும், ஜெயலலிதாவை கடுமையாக சாடியது குறிப்பிடத்தக்கது.