சென்னை: 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி, நடப்பாண்டு (2022) குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் கொடுக்கப்பட்ட வெல்லம் உள்பட சில பொருட்கள் தரமற்று இருந்ததால், கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. மேலும், தமிழகஅரசுக்கு அவப்பெயரை உண்டாக்கியது. இதன் காரணமாக, இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக பணம் வழங்கலாமா என்பத குறித்து முதலமைச்சர் ஆலோசித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து,  குடும்ப அட்டைதாரர்களுக்கு 2023ம் ஆண்டு வழங்கப்பட இருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் நாளை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அறிவிப்பில்,  பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் பணமும் வழங்கப்பட  உள்ளதாகவும்,   இந்த ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதை உறுதிசெய்யும் வகையில், வங்கி கணக்கு இல்லாதவர்களும், கிராமங்களில் வசிப்போரும் பணம் எடுக்க சிரமப்படுவார்கள் என்ற கருத்தும் பரவியது. ஆனாலும் வங்கி கணக்கு இல்லாதவர்கள் வங்கி கணக்கு துவங்க கூட்டுறவுத்துறை ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.