விருதுநகர்: நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதாக சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
வடகிழக்கு பருவமழையொட்டி, சதுரகிரி மழைப்பாகுதிகளில் பெய்து கனமழை காரணமாக, மலைப்பகுதிகளில் செல்லும் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வரும் திங்கள்கிழமை பிரதோஷமும், புதன்கிழமை பௌர்ணமி வழிபாடும் நடைபெற உள்ளன. காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு திங்கள்கிழமை முதல் (டிச. 5 முதல் டிச. 8) 4 நாள்கள் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியது.
ஆனால், மலைப்பகுதிகளிலும், ஸ்ரீவில்லிபுத்தூரிலும், கனமழை பெய்து வருவதால், சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் வழிகளில் உள்ள நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் பல ஊர்களில் இருந்தும் வந்த பக்தர்கள் சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.