திண்டுக்கல்: பழனி அருகே தனியாருக்கு சொந்த நூற்பாலையில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பழனியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திண்டுக்கல், திருப்பூர் மாவட்ட எல்லையான சாமிநாதபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பேப்பர் மில் மற்றும் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதன் ஒரு பிரிவாக நூல்களுக்கு சாயம் ஏற்றும் ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் உள்ள பாய்ர் ஒன்று இன்ற காலை 7 மணியளவில் தீ பிடிக்கத் தொடங்கி உள்ளது. இதனைப்பார்த்த பணியாளர்கள் தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால், முடியாத நிலையில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயை அணைக்க முடியாது என தெரிந்தவுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணியில் இருந்த பணியாளர்கள் அனைவரும் விரைவாக வெளியேறினர். தொடர்ந்து மற்ற பணியாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், தீ பற்றி எரிந்த பாய்லர் வெடித்து சிதறியது. இதையடுத்து ஏற்பட்ட பெரும் தீயை தீயணைப்புத் துறையினர் அணைத்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.