திருப்பூர்: நேற்று, ஆபாச அர்ச்சனை செய்து இருவரும் மோதிக்கொண்ட நிலையில், இன்று, அக்கா, தம்பியாக பழகுகிறோம் என பல்டி அடித்துள்ளது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. நல்லா இருக்குதுடா பாஜக மாடல் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக கழுவி ஊற்றி வருகின்றனர். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்ற கவுண்டமணியின் காமெடிதான் நமக்கு நினைவுக்கு வருகிறது.
தமிழ்நாடு பாஜக பிரமுகர்களான டெய்சி சரண் சூர்யா சிவா இவருக்கும் இடையே நடைபெற்ற ஆபாசமான அருவருக்கத்தக்க, கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வைரலான நிலையில், அவர்கள் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், அவர்கள் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்ததுடன், அக்கா தம்பியாக பழகுகிறோம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
பா.ஜ.க.வில் சர்ச்சை ஆடியோ வெளியான விவகாரத்தில் டெய்சி சரண், சூர்யா சிவா ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இது தொடர்பாக விமர்சனம் செய்த நடிகை காயத்ரி ரகுராமும் சண்பெண்டு செய்யப்பட்டார். இதனால், அவர் கொதித்தெழுந்து பாஜக தலைவர்கள்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்.
இந்த நிலையில், டெய்சி, சூர்யா சிவா ஆகியோரிடம் திருப்பூரில் வைத்து பா.ஜ.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது , சமீபத்தில் வெளியான ஆடியோ விஷயம், எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அவல் ஆகும். ஆனால் பா.ஜனதாவில் நாங்கள் சேர்ந்த நாள் முதல் அப்படி இல்லை. எங்களது பிரச்சினையை நாங்கள் ஒருவருக்கொருவர் பேசி முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம். இதில் யாருடைய வற்புறுத்தலும் இல்லை என்றனர்.
டெய்சி பேசுகையில், சூர்யா தனக்கு தம்பி போலத்தான் எனவும், அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசிய வார்த்தைகள் அரசியல் காரணங்களுக்காக சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்துகின்றனர் எனவும் தெரிவித்தார். இருவரும் பரஸ்பரம் சுமூகமாக பிரச்சனையை முடித்துக் கொள்வது என முடிவெடுத்துள்ளதாகவும், எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், சூர்யா சிவா கூறுகையில், தான் பேசியது தவறுதான் எனவும், இதற்காக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியிடம் மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன்பு எழுத்துப் பூர்வமாக தனது விளக்கத்தை அளித்திருப்பதாகவும், தன் மீது நடவடிக்கை எடுத்தாலும் அதனை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், செல்போனில் பேசிய தங்கள் இருவரிடமிருந்தும் அந்த ஆடியோ வெளியே செல்லவில்லை எனவும், அரசியல் காரணங்களுக்காகவே அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப் பட்டதாகவும், பாஜக கட்சி மற்றும் தலைவர் அண்ணாமலைக்கு களங்கம் விளைவிக்கவே தொடர்ந்து அந்த ஆடியோ பரப்பப்பட்டு வருவதாகவும் சூர்யா சிவா தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு வந்தவர்கள் நாங்கள். இந்த ஆடியோ சம்பவம் கண்பட்டது போல் அரங்கேறிவிட்டது. தனிப்பட்ட முறையில் இருந்தாலும், பொது தளத்தில் இருந்தாலும் ஆடியோ வெளியானதால், இருவரும் எங்களுடைய கருத்தை தெரிவித்துவிட்டோம். எங்களுக்குள் இருந்த பிரச்சினைகளை சுமூகமாக முடித்துவிட்டோம். எங்கள் தரப்பில் இருந்து ஆடியோ வெளியாகவில்லை. அது குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தணிக்கை செய்து வருகிறது.
நாங்கள் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்கள் என்பதால், குடும்பமாக பழகி வந்தோம். அக்கா, தம்பியாக பழகுகிறோம். இனியும் அதே நிலை தொடரும். ஆடியோ விவகாரம், சின்ன தொரு அசாம்பாவிதம்தான். கே.டி.ராகவன் இன்று வரை கட்சி பணியை தொடரவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து தனியாக பேசிய திருச்சி சூர்யா, “கட்சி எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன். கட்சியின் வெளிப்படைத்தன்மை இது. ஆனால் தி.மு.க.வில் அப்படி இல்லை. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பலர், இன்றைக்கு தி.மு.க. அமைச்சர்களாக உள்ளனர். தி.மு.க. எங்களை பார்த்து திருத்திக்கொள்ள வேண்டும்.” என்றார்.