சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி திறப்பது தொடர்பாக வரும் 25ந்தேதிக்குள் அறிக்கை அளிக்க தமிழகஅரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரத்தில் காவல்துறை துரித நடவடிக்கை எடுக்காததால்,  கடந்த ஜூலை 17-ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியை அடித்து நொறுக்கிச் சூறையாடினர். இந்த கலவரத்தைத் தொடர்ந்து பள்ளி மூடப்பட்டு எவரும் நுழையக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 23ந்தேதி , பள்ளியைச் சீரமைக்க அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி சங்கம் சார்பில் அதன் பொருளாளர் முருகேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், கலவரம் காரணமாகப் பள்ளியில் 25 கோடி ரூபாய் அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், சேதத்தைச் சரி செய்ய வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதால் நேரடி வகுப்புகளைத் துவங்கப் பெற்றோர் வற்புறுத்தி வருவதாகவும், வங்கிகளில் கடன் பெற்று பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவற்றைச் சரி செய்ய அனுமதிக்காததன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்க்குப் பொருளாதார இழப்பு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அரசுக்குப் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை வளாகத்தில் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை என்பதால், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளப் பள்ளி வளாகத்துக்குள் நுழைய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனவும், பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தைப் பரிசீலித்துத் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், காவல்துறை, பள்ளி கல்வித்துறை பல்வேறு காரணங்களை கூறி, பள்ளி திறக்க அனுமதி மறுத்து வந்தது. இதையடுத்து கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின்போது, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரை பள்ளிகளை திறக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், அரசு ஏற்பாட்டின் பேரில் ஏற்கனவே ஒன்று முதல் 8 வகுப்புக்கு ஆன்லைன் முறையிலும், ஒன்பது முதல் 12-ஆம் வகுப்புக்கு அருகில் உள்ள பள்ளியில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பள்ளிகளை எப்போதுதான் திறக்க அனுமதிப்பீர்கள் என காட்டமாக கேள்வி எழுப்பியதுடன், வரும் 25ந்தேதிக்குள் பள்ளி திறப்பு தொடர்பாக முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய தமிழகஅரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.