பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சங்மா இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 68.
பி. ஏ. சங்மா என்றழைக்கப்படும் பூர்னோ அகிடோக் சங்மா, மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் பிறந்தவர். பழங்குடியின வகுப்பைச் சார்ந்த இவர், மேகாலயாவில் உள்ள புனித அந்தோணி கல்லூரியில் பி.ஏ பட்டமும், திப்ருகர் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் எம்.ஏ பட்டமும் பிறகு எல்.எல்.பி பட்டமும் பெற்றார்.
1973-ம் ஆண்டு இளைஞர் காங்கிரஸின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், பிறகு தலைவராகவும் ஆனார். . 1975 – 1980 களில் மேகாலயா மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்மா, 1988-1990 வரை மேகாலயா மாநில முதல்வராக இருந்தார்.
கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கட்சியில் இருந்து வெளியேறி, சரத்பவார், தாரிக் அன்வர் ஆகியோருடன் சேர்ந்து தேசியவாத காங்கிரஸ் என்னும் கட்சியை சங்மா ஆரம்பித்தார். பிறகு அக்கட்சியின் தலைவரான சரத் பவாருடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக தேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பிறகு அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
எட்டுமுறை பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இவர், கடைசியாக, டுரா மக்களவைத் தொகுதி எம்.பி.யாக செயல்பட்டுவந்தார்.
மத்திய நிலக்கரித் துறை இணை மந்திரி, மத்திய தொழிலாளர் துறை இணை மந்திரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை காபினெட் மந்திரி போன்ற பொறுப்புகளையும் வகித்த பி.ஏ.சங்மா, 1996 – 1998-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பாராளுமன்ற மக்களவைத் தலைவர் (சபாநாயகர்) ஆகவும் பதவி வகித்தார்.
2012-ம் ஆண்டில் நடைபெற்ற இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு சங்மா ஆதரவு திரட்டினார். இவரை ஆதரிக்கப்போவதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவும், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் அப்போது தெரிவித்தனர் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக சற்று உடல் நலமின்றி இருந்த சங்கா, இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாராளுமன்ற மக்களவை நிகழ்ச்சிகள் அனைத்தும் வரும் செவ்வாய்க்கிழமை (8-ம் தேதி) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.