பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், ஓவர்டைம் மற்றும் இதர படிகள் ஒழுங்காக வழங்கப்படாதை கண்டித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மூன்று சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
2.2 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ள நீதிமன்றம் இதனை 317 ஊழியர்களுக்கு தலா 7000 டாலர் பிரித்து தர உத்தரவிட்டுள்ளது.
ஹோட்டல் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் டிப்ஸ் தொகையையும் அவர்களுக்கு வழங்காமல் உரிமையாளர்களே எடுத்துக்கொண்டதை கண்டித்த நீதிமன்றம். ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்க அறிவுறுத்தியுள்ளது.
“ஊதிய திருட்டு தொழிலாளர்களை பொருளாதார ரீதியாக மட்டுமன்றி உளவியல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று கலிபோர்னியா தொழிலாளர் ஆணையர் லிலியா கார்சியா-ப்ரோவர் கூறினார். “பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுசீரமைப்பு நீதி வழங்க எனது அலுவலகம் செயல்படுகிறது. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை உறுதி செய்வதும், முதலாளிகள் அவர்களின் தவறுகளை ஒப்புக்கொள்வதும் இந்த வழக்கின் நோக்கமாகும்” என்றும் தெரிவித்தார்.
பிப்ரவரி 23, 2016 முதல் செப்டம்பர் 8, 2019 வரை மூன்று உணவகங்களில் பணிபுரிந்த சர்வர்கள், சுத்தம் செய்பவர்கள், சூப்பர்வைசர்கள், சமையலறை ஊழியர்கள் மற்றும் சமையல்காரர்கள் உட்பட 317 ஊழியர்கள் பாதிக்கப்பட்டதாக தொழிலாளர் ஆணையரின் வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
கலிபோர்னியா மாகாணத்தின் ஃப்ரீமாண்ட், மில்பிடாஸ் மற்றும் சன்னிவேல் ஆகிய இடங்களில் உள்ள சரவணபவன் பிரான்ச்சைஸ்களை நிர்வகிக்கும் ஸ்பைஸ் ரூட் எல்எல்சி, சதர்ன் ஸ்பைஸ் எல்எல்சி மற்றும் சுப்ரீம் கியூசின் எல்எல்சி ஆகிய மூன்று நிறுவனங்கள் மற்றும் அதன் நிர்வாக பங்குதாரர்களான அஸ்கர் ஜுனைட் மற்றும் பி.கே. பெருமாள் ஆகியோர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டது.
தவறான முறையில் பிடித்துவைக்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்குவது மற்றும் உணவகங்களின் உரிமையாளர்கள் தனிப்பட்ட முறையில் தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்பது தவிர அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் குறித்தும் தொழிலாளர் சட்டங்கள் குறித்தும் பயிற்சி அளிக்க வேண்டும்.
மேலும் ஊழியர்களின் உரிமை தொடர்பான உதவிக்குறிப்புகள் தமிழ், ஸ்பானிஷ் மற்றும் நேபாளி ஆகிய மொழிகளில் நிறுவன முதலாளியின் செலவில் விளக்கப்படும் என்று தீர்ப்பளித்துள்ளது.