சென்னை: அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் குறித்து, 6வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா. இவர் ராணி மேரி கல்லூரியில் படித்து வந்தார். இவரது பயிற்சியின்போது கால் மூட்டில் அடிபட்டதால், அதற்கான சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு காலில் கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்குகொடுக்கப்பட்ட சிகிச்சை காரணமாக, அவரது கால் அழுகியது. இதனால், மேல்சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவரது கால் அகற்றப்பட்டது. மேலும், காலில் போடப்பட்ட கட்டு காரணமாக, ரத்த ஓட்டம் நின்றுபோனதால், அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து மரணமடைந்தார். இது பெரும் அதிர்ச்சியையும், கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர்கள் 2 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் மறைந்த பிரியா குடும்பத்துக்கு இலவச வீடு, ரூ.10 லட்சம் நிவாரணம், ஒருவருக்கு அரசு வேலை என தமிழகஅரசு அறிவித்து, அதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளது.
இந்த நிலையில், வீராங்கனை பிரியா மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளதுடன், மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு நேர்ந்த கொடூரம்! மருத்துவர்களின் அலட்சியத்தால் பறிபோன உயிர்…