சென்னை: தவறான மருத்துவ சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்கள் வசிக்க அரசு வீடு ஒதுக்கிய ஆணையும் , நிவாரண தொகையும் வழங்கினார்.
சென்னை குயின்மேரிஸ் கல்லூரியில் படித்து வந்த கால்பந்துவீராங்கனை, பயிற்சியின்போது முழங்காலில் எற்பட்ட காயம் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், மருத்துவர்களின் அஜாக்கிரதை காரணமாக, உயிரிழந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் அரசு மீது கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து, தமிழக அரசின் சார்பாக மாணவியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்றும், ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறான மருத்துவ சிகிச்சையின் காரணமாக மரணமடைந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிக்க வியாசர்பாடியில் உள்ள மாணவியின் வீட்டிற்கு சென்றார். அங்கு மாணவியின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதுடன், மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, மாணவி குடும்பத்தினர் வசிக்க வீட்டிற்கான ஆணையையும், ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டிருந்த ரூ.10 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார். முதலமைச்சருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் சென்று மாணவி பிரியாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் வீட்டு வந்து ஆறுதல் கூறியபோது பிரியாவின் தந்தை அவரது கையை பிடித்து கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கண்கலங்கினார். இந்த வேளையில் முதல்வர் ஸ்டாலின் அவரை தேற்றி ஆறுதல் தெரிவித்தார். மகளை இழந்த துயரத்தில் இருந்த பிரியாவின் தந்தை முதல்வர் ஸ்டாலின் கையில் முத்தம் தந்தார். இது அனைவரையும் கண்கலங்க செய்தது. மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கு பிரியாவின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள முதலமைச்சர், ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான பிரியா மரணம் அவரது குடும்பம், விளையாட்டுத்துறைக்கும் மாபெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் பிரியாவின் உயிர்க்கு ஈடாகாது என முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் பிரியாவின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிவிட்டு வீடு வழங்கும் ஆணையை வழங்கிய பிறகு முதல்வர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு நேர்ந்த கொடூரம்! மருத்துவர்களின் அலட்சியத்தால் பறிபோன உயிர்…