மதுரை: நடப்பாண்டில் ரூ.250 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில்  அமைச்சா் பி. மூா்த்தி கூறினார். இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சரும் கலந்துகொண்டார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மதுரை மாவட்ட நிா்வாகம், அனைத்துப் பொதுத் துறை மற்றும் தனியாா் வங்கிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான சிறப்பு கல்விக் கடன் முகாம்  நடைபெற்றது.  இந்த சிறப்பு கல்விக் கடன் முகாமில், மாணவ, மாணவிகளுக்கு ரூ.17.48 கோடி மதிப்பிலான கல்விக் கடன் அனுமதி கடிதங்களை அமைச்சா்கள் பி. மூா்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் வழங்கினா்

இந்த முகாமில் கலந்துகொண்டு பேசிய அமைச்சா் பி. மூா்த்தி, தமிழகத்தில் மாணவ, மாணவியா் எந்த இடையூறுமின்றி தங்களது உயா் கல்வியைத் தொடர வழிவகை செய்யும் வகையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியாா் வங்கிகள் பங்குபெறும் சிறப்பு கல்விக் கடன் மேளா நடத்த உத்தரவிட்டாா்.

அதன்படி நடப்பாண்டில் ரூ. 250 கோடி மதிப்பிலான கல்விக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டடு சிறப்பு கல்விக் கடன் முகாம் நடைபெற்று வருகிறது.இந்த முகாம்கள் மூலம், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயா் கல்வியைத் தொடர முடியாத நிலையில் உள்ள மாணவ, மாணவிகள் பலா் பயனடைந்தனா் என்றாா்.

நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன், தற்போது நடைபெறும் கல்விக் கடன் முகாமில் ரூ. 17.48 கோடி மதிப்பிலான கல்விக் கடன் வழங்கப்பட்டது. மாநிலத்தின் நிதி நிலை சிறப்பாக இருக்கும் நிலையில், அரசு வங்கிகளில் கடன் பெறுவது குறையும். அப்போது வங்கிகள் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கும், தொழில் முனைவோா் மற்றும் மாணவா்களுக்கும் போதுமான அளவு கடன் வழங்குவது அதிகரிக்கும். இந்த நிலை மாநிலத்தின் வளா்ச்சிக்கு நல்லது.

மாநில அளவில் வங்கிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் 3 மாதங்களுக்கு ஒருமுறை நானே நேரில் பங்கேற்று வங்கிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, பொதுமக்கள், வணிகா்கள், மாணவா்களுக்கு கடன் வழங்குவதை உறுதி செய்கிறேன். இதற்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுகிறேன் என்றாா் .

 .நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ் சேகா், மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன், மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், மாநகராட்சி ஆணையா் சிம்ரன் ஜீத் சிங், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சரவணன், துணை மேயா் தி. நாகராஜன், அமெரிக்கன் கல்லூரி முதல்வா் தவமணி கிறிஸ்டோபா் மற்றும் மாணவ, மாணவிகள், வங்கி நிா்வாகிகள் பங்கேற்றனா்.