திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒருவரை தவிர 8 பேர் ஒப்புதல் அளித்துள்ளதாக நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பயிற்சிக்குச் செல்லும்போது கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யபட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், திமுக அரசு பதவிக்கு வந்ததும், மீண்டும் விசாரணை சூடுபிடித்துள்ளது.
இதையடுத்து, சிபிசிஐடி காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, அந்த பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் ரவுடிகள் பிடித்து அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த காவல்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி 9 பேரில் 8 பேர், உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இந்த வழக்கு நடைபெற்று வரும் திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் முன்பு, உண்மை கண்டறியும் சோதனை செய்யப்படு 8 பேரான சத்யராஜ், லட்சுமி நாராயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா, சுரேந்தர், கலைவாணன் ஆகியோரில் 4 பேரை ஆஜர்படுத்தினர். இதையடுத்து மற்ற 4 நான்கு பேரையும் வரும் 17ஆம் தேதி நேரில் ஆஜராக திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், சண்முகம் என்பவர் மட்டும் கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.