சென்னை: தமிழ்நாட்டில் கடந்தவாரம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பார்வையிடுகின்றனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம்  வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்கள் உள்பட மாநிலம் முழுவதும் கனமழை கொட்டியது. கடந்த 22 ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ மழை கொட்டிது. இதனால், அந்த பகுதியே தீவுபோல காட்சி அளித்தது. இதனால், சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள 32 கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

பிரபலமான சீர்காழி சட்டநாதர் கோவில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், தையல்நாயகி அம்மன் உடனுறை வைத்தியநாதசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் மழைநீர் புகுந்தது. சீர்காழியில் மட்டும் 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,156 குடும்பங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 577 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கன மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை  நேரில் ஆய்வு செய்கிறார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், வடசென்னைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை என மக்கள் தெரிவித்தனர். இன்னும் சில இடங்களில் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இன்று சீர்காழியில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அதுபோல சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிடுகிறார்.  ஆலந்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் பார்வையிட உள்ளார். சென்னை மாநகர் பொறுத்தவரை மழைநீர் அவ்வப்போது மாநகராட்சி ஊழியர்களால் அகற்றினாலும், சில பகுதிகளில் தண்ணீர் இன்னும் தேங்கி காணப்படுகிறது. அந்த நீரை வெளியேற்றுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை, ஆலந்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று நேரில் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.