சென்னை: சென்னை சென்ட்ரல் — மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை, பிரதமர் மோடி இன்று தொடங்கி  வைக்கிறார். இந்த விழா கர்நாடகா மாநிலம், பெங்களூரில் நடைபெறுகிறது. இந்த ரயில் சேவை தென்னிந்தியாவின் முதல் சேவை என்ற பெருமை பெறுகிறது.

மத்தியஅரசு நாடு முழுவதும் அதிவேக வந்தே பாரத் ரயிலை இயக்குவதாக அறிவித்தது. அதன்படி, தற்போது 5வது வந்தே பாரத் ரயில், சென்னை மைசூரு இடையே இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. முன்னதாக இந்த ரயில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வெள்ளோட்டம் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து,. இந்த ரயில் சேவையை,  பிரதமர் மோடி இன்று பெங்களூருவில்  தொடங்கி வைக்கிறார்.

இந்த ரயில்,  சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 5:50 மணிக்கு புறப்படும் ரயில், பெங்களூரு வழியாக நண்பகல் 12:20 மணிக்கு மைசூர் சென்றடையும். மைசூரில் இருந்து மதியம் 1:05 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 7:30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரயில் புதன்கிழமை தவிர, வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முழு குளிருட்டடப்பட்ட (ஏசிஸ்ரீ அதிநவீன வசதிகள், மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் உட்பட பல்வேறு வசதிகளை கொண்ட இந்த ரயிலில், 16 பெட்டிகள் உள்ளன; 1,128 பேர் அமர்ந்து செல்ல முடியும்.

சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயிலானது வேலூர்  காட்பாடியில் காலை, 7:21 மணிக்கும்; கே.எஸ்.ஆர்., பெங்களூருவில் காலை, 10:20 மணிக்கும் நின்று செல்லும். அதுபோல மைசூரில் இருந்து சென்னை வரும் வந்தே பாரத் ரயில் கே.எஸ்.ஆர்., பெங்களூருவில் பிற்பகல், 2:55 மணிக்கும், காட்பாடி சந்திப்பில் மாலை, 5:36 மணிக்கும் நின்று செல்லும்.

வந்தே பாரத் ரயிலில் எந்தவித கட்டண சலுகையும் கிடையாது.  சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சென்ட்ரல் – மைசூருக்கு, ‘ஏசி’ சேர் கார் கட்டணம், 1,275 ரூபாய்;  ‘ஏசி’ சிறப்பு வகுப்பு பெட்டி, 1,980 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை – காட்பாடிக்கு ‘ஏசி’ சேர்கார் கட்டணம் 495 ரூபாய்; சிறப்பு வகுப்பில், 950 ரூபாய்; கே.எஸ்.ஆர்., பெங்களூருக்கு ‘ஏசி’ சேர்கார் கட்டணம் 995 ரூபாய்; சிறப்பு வகுப்பில், 1,885 ரூபாய் என, கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.