லண்டன்: இந்தியாவில் சுமார் ரூ.13,000 கோடி வங்கிக் கடன் மோசடி செய்துவிட்டு, லண்டன் சென்ற தலைமறைவான பிரபல வைரவியாபாரி, நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என லண்டன் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, அவர் விரைவில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி முறைகேடு செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைரவியாபாரி நீரவ்மோடி அறிவிக்கப்பட்டார். அவர் கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து லண்டன் தப்பிச் சென்று லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று லண்டன் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். நிரவ் மோடி தற்போது லண்டன் வாண்ட்ஸ்வர்த் சிறையில் உள்ளார்.
வரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சியை இன்டர்போல் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கில், நிரவ்மோடி தரப்பில் அடுத்தடுத்த நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்து, இந்தியா வருவதை தடுத்து வருகிறார்.
தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த கூடாது என லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் நீர்வ் மோடி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் நீரவ் மோடியை இந்தியாவுக்கு கடத்தலாம் எனத் தீர்ப்பளித்து கடந்த பிப்ரவரி மாதத்தில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து லண்டன் உயர்நீதிமன்றத்தில் நிரவ் மோடி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதில் மனுத்தாக்கல் செய்த இந்திய தரப்பு வழக்கறிஞர்கள், 2019ம் ஆண்டு முதல் லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடியை இந்தியா கொண்டு வந்து விசாரணைக்கு ஆஜர்படுத்த வேண்டும் என்பதால், அவரை நாடு கடத்த அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிரவ் மோடி வழக்கறிஞர், நீரவ் மோடிக்கு கடுமையான மனநல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அவரை நாடு கடத்தி இந்திய சிறையில் அடைத்தால் தீவிர பாதிப்புக்கு ஆளாவார் என கூறியதுடன், அவர் இந்தியா சென்றால், தான் கொலை செய்யப்படவோ, அல்லது தற்கொலையோ செய்து கொள்ளும் நிலை ஏற்படும் என்பதால் நாடு கடத்த அனுமதிக்க கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த இந்திய தரப்பு வழக்கறிஞர், மும்பையில் உள்ள சிறையில் நீரவ் மோடிக்கு மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு, உரிய பாதுகாப்பை உறுதி செய்வோம் என்றார். இதையடுத்து, வழக்கை விசாரித்த லண்டன் உயர் நீதிமன்றம் நீரவ் மோடியை இந்தியாவுக்கு கடத்தலாம். அதற்கு எந்த தடையும் இல்லை எனத் தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
நீரவ் மோடியை நாடு கடத்த தடையில்லை என தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் நீரவ் மோடியை அதிக கவனத்துடன் கண்காணித்து கொள்வதாக இந்திய அரசு, லண்டன் நீதிமன்றத்தில் உறுதியளித்தது. இந்த உறுதி மொழியைக் காப்பாற்ற தவறிவிட்டால் இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கை பாதிக்கப்படும் என்பதால் இந்தியா நிச்சயம் வாக்குறுதியை செயல்ப்படுத்தும் என்றும் லண்டன் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதையடுத்து நிரவ்மோடி தரப்பில், ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் முறையிட திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டால், அவரை நாடு கடத்துவது மேலும் தாமதமாகும்.