சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், இறுதிச்சுற்று கலந்தாய்வில் 36,057 மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  இருந்தாலும் சுமார் 50ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

 தமிழகத்தில் 431 பொறியியல் கல்லூரிகளில் (அரசு, அரசு உதவிபெறும், தனியார், அண்ணா பல்கலைக்கழகம்) மாணவர் சேர்க்கை நடைபெறும். அந்த கல்லூாிகளில் அரசு இடஒதுக்கீட்டின் கீழ் 1,48,811 இடங்கள் உள்ளன. தனியார் கல்லூரிகளில் 65 சதவீதம் அரசு இடஒதுக்கீடு வழங்கப்படுகின்றன. இதில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 10,965 இடங்கள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக துறைகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவை சோ்ந்த மாணவர்களுக்கு 2 சதவீத இடங்களான 175 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தரவரிணை எண்ணை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் காணலாம்.

இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மாற்றுத் திறனாளிகள் உட்பட சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில் 668 இடங்கள் நிரப்பப்பட்டன. தொடர்ந்து, பொதுப்பிரிவு கலந்தாய்வு மொத்தம் 4 சுற்றுகளாக நடத்தப்பட்டது. அதில் 3 சுற்றுகள் முடிவில் 58,307 இடங்கள் நிரம்பின. இறுதியாக 4-ம் சுற்று கலந்தாய்வு அக்டோபர் 29-ல் தொடங்கியது. இதில் பங்கேற்க மொத்தம் 61,771 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களில் 36,057 பேருக்கு சேர்க்கை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் நவம்பர் 10-ம் தேதிக்குள் சென்று மாணவர்கள் கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் அந்த இடங்கள் வேறு நபருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுவிடும். கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் அறியலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொறியியல் கலந்தாய்வு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள சூழலில், இதுவரை 95,032 இடங்கள் நிரம்பியுள்ளன. தற்போது 4-வது சுற்றில் சேர்க்கை கடிதம் பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சென்று அதை உறுதி செய்யும்போது, முதல்கட்ட கலந்தாய்வில் நிரம்பிய இடங்களின் விவரம் முழுமையாக தெரியவரும். இவற்றில் ஏற்படும் காலியிடங்களை நவம்பர் 3-வது வாரத்தில் நடைபெற உள்ள துணை கலந்தாய்வு மூலம் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தள்ளர்.

இருந்தாலும்,  நடப்பாண்டு பொறியியல் கல்லூரிகளில் சுமார் 50 ஆயிரம் இடங்கள் வரை காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.