சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி, நோய் பரவலை தடுக்கும் வகையில், நாளை சென்னை முழுவதும் 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் நடத்தப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தமிழக அறிஞர் என்று சொல்லப்படும் நெடுஞ்செழியன் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்ற வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை  உயிரிழந்தார். அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலத்திய அமைச்சர்,  அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை சென்னை யில் உள்ள 200 வார்டுகளிலும் 200 மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது என்றார்.  இந்த மருத்துவ முகாம்கள் ஒவ்வொரு வார்டுகளிலும் எங்கு அமைக்க வேண்டும் என்பது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும் என் தெரிவித்தவர், முகாமில்,  காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்து வழங்கப்படும்  என கூறினார்.

மேலும், பள்ளி மாணவர்களின் நலன் கருதி நாளை பள்ளி திறக்கும் போது பள்ளி வளாகத்தில் உள்ள தண்ணீரை அகற்றிய பின் நடமாடும் வாகனங்கள் மூலம் மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.