திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் புழல் நீர் தேக்த்திற்கு நீர்வரத்தானது வினாடிக்கு 2000 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அதன் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில், தற்போது 2692 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மொத்த உயரமான 21.20 அடியில் தற்போது 18.42 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், பாதுகாப்பு கருதி உபநீர் வெளியேற்றும் மதகுகள் வழியே, முதற்கட்டமாக வினாடிக்கு 100 கன அடி உபரிநீரானது மாலை 3 மணியளவில் வெளியேற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த வழித்தடத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் தண்டல்கழனி, வடகரை, வட பெரும்பாக்கம், மணலி புதுநகர், சடையன் குப்பம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் ஆல்பி ஜான்வர்கிஸ் அறிவுறுத்தியுள்ளார்.
அதுபோல செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டுள்ளதால், அடையார் ஆற்றில் வெள்ளப்பெருக்கை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதனால் அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.