திருச்சி: கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக திருச்சி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி வீட்டில் காவல்துறை சோதனை நடத்தினர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 23-ந்தேதி அதிகாலையில், கோவை உக்கடம் கோட்டை மேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் நாசவேலைக்கு திட்டமிட்டிருந்த தகவலும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நாச வேலையில் தொடர்புடைய 16 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கை என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, நெல்லை, திருவாரூர் உள்பட பல பகுதிகளில் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று திருச்சியில் எஸ்டிபிஐ கட்சி பிரமுகர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சி விமான நிலையம் அருகே வயர்லெஸ் ரோட்டில் உள்ள ஸ்டார் நகர் பகுதியில் வசித்து வருபவர் அப்துல் முத்தலீப் (வயது 35). காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வரும் அவர் எஸ்.டி.பி.ஐ. கட்சி உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
இவர் பயங்கரவாத செயல்களுக்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் என்.ஐ.ஏ. அறிவுறுத்தலின் பேரில் இன்று அவரது வீட்டில் உள்ளூர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை அப்துல் முத்தலீப் வீட்டில் அதிரடியாக நுழைந்தனர். 6 மணி முதல் 7 மணி வரை இந்த சோதனை நடத்தப்பட்டது.
அப்போது வீட்டில் இருந்த அப்துல் முத்தலீப் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை வெளியில் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் வீட்டின் கதவை உட்புறமாக பூட்டிக்கொண்டு அங்குலம் அங்குலமாக போலீசார் சல்லடை போட்டு சோதனை செய்தனர்.
இந்த திடீர் சோதனையில் அப்துல் முத்தலீப்பின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டில் இருந்த ஒருசில ஆவணங்களையும் கைப்பற்றி எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அப்துல் முத்தலீப்புக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் என்.ஐ.ஏ. அமைப்பினர் இந்த சோதனையை நடத்துமாறு திருச்சி போலீசாருக்கு உத்தரவிட்டதாகவும், அதன்பேரில் சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.