சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர், தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் ஆகியோர் இன்றுடன் (அக்டோபர் 31ந்தேதி) பணி ஓய்வு பெறுகின்றனர்.
சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் தற்போது, கொடநாடு கொலை கொள்ளை வழக்க, , அதிமுக அலுவலக கலவர வழக்கு, அமைச்சர் கே.என். ராமஜெயம் கொலை வழக்கு என பல முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த நிலையில், அவர் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அதுபோல, தமிழ்நாடு சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங் இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
டிஜிபி ஷகீல் அக்தர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1989 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். தமிழ்நாட்டின் தர்மபுரியில் ஏஎஸ்பியாக பணியைத் தொடங்கினார். தமிழ்நாடு சிறப்பு காவல்படை கமாண்டண்டாகவும், சிவகங்கை எஸ்பியாகவும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்பி, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு எஸ்பியாக ஷகில் அக்தர் பணியாற்றி உள்ளார். சென்னை போக்குவரத்து வடக்கு துணை ஆணையராகவும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தலைவருக்கு சிறப்பு பாதுகாப்பு பணியிலும், இந்திய உள்நாட்டு விவகார அமைச்சருக்கு தனி செயலாளராகவும் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர். காஞ்சிபுரம் மாவட்ட டிஐஜி, நிர்வாக பிரிவு ஐஜி, போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர், தலைமையிட ஐஜி, தொழில்நுட்ப பிரிவு கூடுதல் டிஜிபி, சிறப்பு காவல்படை கூடுதல் டிஜிபி உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு மதுரை துணை ஆணையராக இருந்தபோது, கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த, பெங்களூரில் வைத்து என்கவுண்டர் செய்த சம்பவம் உள்ளிட்ட நடவடிக்கைக்காக பாராட்டு பெற்றவர். என்கவுண்டருக்கு பிறகு தீவிரவாதிகள் மிரட்டலால் ஷகீல் அக்தருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
மு.க.அழகிரி மத்திய அமைச்சராக இருந்த போது அவருக்கு பாதுகாப்பு பிரிவு அதிகாரியாக டெல்லியில் பணியில் இருந்துள்ளார். சிறப்பாக பணி புரிந்ததற்காக மூன்று முறை ஜனாதிபதி விருதை ஷகில் அக்தர் பெற்றுள்ளார். தற்போது, சிபிசிஐடி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டு வந்த நிலையில், அவர் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
அதுபோல இன்றுடன் பணி ஓய்வு பெறும் மற்றொரு முக்கிய அதிகாரியான சுனில் குமார் சிங், 1988 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. இவர் தமிழ்நாட்டில், நீலகிரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய இடத்தில் எஸ்பியாகவும், ராமநாதபுரம், திருச்சி, மதுரை ஆகிய இடத்தில் டிஐஜியாகவும், திருச்சி, சேலம், திருநெல்வேலியில் ஆணையராகவும் சுனில் குமார் சிங் பணியாற்றி உள்ளார். அதன் பிறகு சென்னை தலைமையிட கூடுதல் கமிஷ்னராகவும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபியாகவும், தற்போது சிறைத்துறை டிஜிபியாகவும் சுனில் குமார் சிங் பணியாற்றி வந்துள்ளார். சுனில் குமார் சிங் பணியாற்றியபோது தான், முதன்முறையாக ஆன்லைன் மூலமாக ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.