இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் படம் போட்ட நாணயம் அச்சிடும் பணி துவங்கியிருக்கிறது, 50 பென்ஸ் மதிப்பிலான இந்த நாணயம் வரும் டிசம்பர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிற்பி மார்டின் ஜென்னிங்ஸ் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் இந்த நாணயத்தில் உள்ள உருவம் மன்னர் சார்லஸின் 70 வது பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை மாதிரியாகக் கொண்டு வடிக்கப்பட்டுள்ளது.
முந்தைய அரசர்கள் மற்றும் ராணி எலிசபெத்தைப் போல் அல்லாமல் மகுடம் இல்லாத மன்னர் சார்லஸ் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முந்தைய ஆட்சியாளர் பார்க்கும் பக்கத்திற்கு எதிர் பக்கத்தில் அடுத்த ஆட்சியாளர் பார்ப்பது போல் வடிவமைப்பது என்ற ஐதீகம் பின்பற்றப்படுவதால் மன்னர் சார்லஸ் இடதுபுறம் பார்ப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது.
அனைத்து வர்த்தகமும் பவுண்டாக மாறிய பிறகு பென்னி-களிலின் புழக்கம் குறைந்துள்ளது. இதனை அடுத்து 96 லட்சம் 50 பென்ஸ் நாணயங்கள் மட்டும் இப்போதைக்கு அச்சிடப்படுகிறது.
இங்கிலாந்தில் பல்வேறு மதிப்பிலான மொத்தம் 2700 கோடி நாணயங்கள் புழக்கத்தில் உள்ள நிலையில் மற்ற மதிப்பிலான நாணயங்கள் தேவைக்கு ஏற்ப பிறகு அச்சடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
உலகளவில் மிகப்பெரும் பணக்கார நாடாக இருக்கும் இங்கிலாந்து 72 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தனது நாணயத்தில் புதிய மாற்றத்தை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.