மதுரை: குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்புவதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக வழக்கை விசாரித்து வந்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிகளுக்கு அனுப்புவதை நீதிமன்றம் ஏற்காது. அனைத்து பள்ளிகளிலும் முறையாக வாகன விதிகளை பின்பற்ற வேண்டும் என தெரிவித்து உள்ளது. பள்ளிக்கல்வி துறை இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது .
தமிழ்நாட்டில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு சற்று தொலைவில் இருந்து செல்லும் மாணாக்கர்கள், பள்ளி பேருந்து, அரசு பேருந்து, மற்றும் ஆட்டோக்களில் சென்று வருகின்றனர். இதற்கு காரணம், மக்கள் வசிக்கும் உட்புற பகுதிகளில் அரசு பேருந்துகள் செல்ல முடியாது என்பது மட்டுமின்றி, தனியார் பள்ளி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை ஏற்க முடியாமலும், பெரும்பாலோன சாமானிய மக்கள் தங்களது குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிகளுக்கு அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில், ஆட்டோவில் பள்ளிக் குழந்தைகள் செல்லக்கூடாது என நீதிபதி கூறியிருப்பது விந்தையாகத்தான் உள்ளது.