சென்னை: கோவை கார் வெடிப்பில் பலியான முபினின் நெருங்கிய கூட்டாளிகள் 15 பேரை பிடிக்க தமிழ்நாடு காவல்துறை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இவர்கள் தமிழ்நாட்டின் பல இடங்களில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டி இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. நேற்று நெல்லையில் முஸ்லிம் மதகுரு ஒருவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், மேலும் பலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் குண்டு வெடிப்பு போன்ற சதி திட்டத்தை நடத்தும் எண்ணத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலருடன் முபின் நெருங்கிய தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களை கைது செய்யும் முனைப்பில் தமிழ்நாடுகாவல்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது. முபின் பயன்படுத்திய செல்போன் நம்பரை வைத்து இது தொடர்பாக போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.
கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் நாளுக்கு நாள் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தில் ஈடுபட்ட முபின் உள்பட அனைவரும் 23 முதல் 28வயதுக்குரிய இளைஞர்கள் என்பதும், அவர்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், கார் வெடித்து பலியான முபின் சென்ற காரில் வெடிமருந்துகள் இருந்ததும், அவரது வீட்டில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதும், அவர்கள் தமிழ்நாட்டில் பயங்கரவாத செயல்களை நடத்துவற்கான முயற்சியில் இருந்தது தெரிய வந்தது. மேலும், முபினின் டைரியில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, கோவையில் 5 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் அம்பலமானது. அந்த திட்டங்கள் கார் வெடிப்பு சம்பவத்தால் தடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட 6 குற்றவாளிகளிடம் காவல்துறையினர் அதிரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. வெடி மருந்துகளை பயன்படுத்தி கோவையில் 5 இடங்களில் குண்டு வைப்பதற்கு முபினும் அவனது கூட்டாளிகளும் திட்டமிட்டது வெட்டவெளிச்சமானது. மேலும், கோவையை தாண்டி வெளி மாவட்டங்களிலும் முபின் பலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால், மேலும் பல இடங்களில் குண்டு வைக்க அவர் திட்டமிட் டிருக்கலாம் எனறு கூறப்படுகிறது. முபினுக்கு பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்திருப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதில் ஒருசிலர் பண உதவி களையும் பொருள் உதவிகளையும் செய்திருக்கிறார்கள்.
இதுதொடர்பாக நேற்று நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள மதகுரு ஒருவர்வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், ஏர்வாடி மற்றும் கடலூர் பரங்கிப்பேட்டையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதன்மூலம் முபின் நெட்வோர்க்கில் மேலும் 15 பேர் வரை இருந்ததுதெரிய வந்துள்ளது. அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை தமிழக காவல்துறை முடுக்கி விட்டுள்ளது.
இந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தற்போது என்.ஐ.ஏ. விசாரித்து வரும் நிலையில், அந்த அதிகாரிகளுடன் சேர்ந்து மாநில போலீசாரும் அதிரடி விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடைபெறாத வகையில், முபினின் கூட்டாளிகளுக்கு வலை வீசப்பட்டுள்ளது.
கோவை கார் வெடிப்பில் பலியான முபின், அமேஷான், பிளிப்கார்ட் மூலம் வெடிமருந்துகளை வாங்கியது அம்பலம்!