ட்விட்டர் நிறுவனத்தை நேற்று அதிகாரபூர்வமாக விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் இன்று அதன் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வாலை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

உலகின் முன்னணி சமூக ஊடகமான ட்விட்டர் நிறுவனத்தை வாங்கப் போவதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உலகின் முதல் நிலை பணக்காரரான எலான் மஸ்க் முதன் முதலாக அறிவித்தார்.

பின்னர் இந்த நிறுவனத்தை வாங்கும் விஷயத்தில் ஒரு நிலையாக இல்லாமல் போக்கு காட்டி வந்த எலான் மஸ்க்-கிற்கு இதனை வாங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதை அடுத்து 44 பில்லியன் டாலருக்கு (3.65 லட்சம் கோடி ரூபாய்) ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் நேற்று செயல்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நிறுவனத்தை கழுவி சுத்தம் செய்ய ‘சிங்க்’-க்கும் கையுமாக அதிரடியாக ட்விட்டர் நிறுவனத்துக்கு வந்த எலான் மஸ்க் முதல் வேலையாக அதன் தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

இவரைத் தொடர்ந்து சி.எப்.ஓ. நெட் செகல் மற்றும் முக்கிய அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள எலான் மஸ்க் இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நிறுவனத்தில் இருந்து வெளியேற முழு சுதந்திரம் அளித்துள்ளார்.

ஊழியர்களுக்கு 75 சதம் வரை ஊதிய குறைப்பு இருக்கும் என்று ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்ட நிலையில் தற்போது அந்தளவுக்கு ஊதிய குறைப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை வெள்ளிக்கிழமைக்குள் முழுமையாக செயல்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதால் எலான் மஸ்க் மேலும் என்ன அதிரடி காட்டுவார் என்பது தெரியவில்லை.