பொருளாதார சீர்திருத்தத்தின் பலனை அனுபவிக்க ஐம்பது நாட்கள் கூட பொறுமை காக்க முடியாத மக்களின் எதிர்ப்பால் 45 நாட்களிலேயே தனது பிரதமர் பதவியை லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்திருப்பது தற்கொலைக்கு சமமானது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் செப்டம்பர் 6ம் தேதி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
பார்ட்டி பப் என்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த பழமைவாத கட்சியின் தலைவர் ஜான்சன் நடத்தை மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜூலை 7ம் தேதி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை ஜூலை 10 ம் தேதி துவங்கியது போரிஸ் ஜான்ஸன் இடத்தைப் பிடிக்க ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் இடையே கடும் போட்டி நிலவியது சுமார் இரண்டு மாதங்கள் நடைபெற்ற தலைவர் தேர்தலுக்கான போட்டியில் டோரி தலைவராக 47 வயதான லிஸ் ட்ரஸ் வெற்றிபெற்று பிரதமரானார்.
செப்டம்பர் 6 ம் தேதி பிரதமராக பொறுப்பேற்ற லிஸ் ட்ரஸ் சரிந்து கிடந்த இங்கிலாந்து பொருளாதாரத்தை மீட்க மேற்கொண்ட நடவடிக்கையால் அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் எதிர்ப்பையும் ஆர்பாட்டங்களையும் சந்தித்தார்.
இதனால் பழமைவாத கட்சிக்குள் அவருக்கு எதிர்ப்பு குரல் கிளம்பியதோடு அவரது அமைச்சரவை சகாக்கள் ஒருவர் பின் ஒருவராக ராஜினாமா செய்தனர்.
நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் எதிரொலித்ததை அடுத்து தனது பொருளாதார சீர்திருத்தங்களின் பலனை அனுபவிக்க 50 நாட்கள் கூட அவகாசம் அளிக்காத எம்.பி.க்களின் எதிர்ப்பால் தனது பிரதமர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
45 நாட்கள் மட்டுமே பதவியில் இருந்து இங்கிலாந்தில் மிகக்குறைந்த நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்தவர் என்று வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார் லிஸ் ட்ரஸ்.
இங்கிலாந்தில் லிஸ் ட்ரஸ் தவிர குறைந்த நாட்கள் பிரதமர் பதவியை வகித்தவர்களின் பட்டியல் :
ஜார்ஜ் கேனிங் – 121 நாட்கள் (ஏப்ரல் 10, 1827 – ஆகஸ்ட் 8 1827) (மரணமடைந்தார்)
ஃபிரடெரிக் ஜான் ராபின்சன் – 144 நாட்கள் (ஆகஸ்ட் 31, 1827 – ஜனவரி 21 1828) (மாற்றப்பட்டார்)
பொனர் லா – 210 நாட்கள் (அக் 23 1922 – மே 20 1923) (உடல்நிலை காரணமாக ராஜினாமா)
வில்லியம் கேவென்டிஷ் – 236 நாட்கள் (நவம்பர் 6 1756 – ஜூன் 29 1757) (மாற்றப்பட்டார்)
வில்லியம் பெட்டி – 267 நாட்கள் (ஜூலை 13 1782 – ஏப்ரல் 5 1783) (மாற்றப்பட்டார்)
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியை லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்ததை அடுத்து அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக நடவடிக்கை இந்த மாதம் 28 ம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.