சென்னை: சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை எதிர்த்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டு, எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமாரை ஏகமனதாக தேர்ந்தெடுத்து அது தொடர்பான கடிதத்தை சட்டமன்ற சபாநாயகரிடம் கொடுத்தோம். மீண்டும் 2முறை நினைவூட்டல் கடிதம் கொடுத்தோம். ஆனால் அதை சபாநாயகர் 3 மாதம் கிடப்பில் போட்டு விட்டு எந்த முடிவும் சொல்ல வில்லை.
நேற்று மூத்த எம்.எல்.ஏ.க்களுடன் நேரில் சந்தித்து முழுமையாக விளக்கம் அளித்தோம். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஆகியோர் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கூட இல்லை. ஆனால் எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர் செல்வத்தை அமர வைத்தனர். இது என்ன நியாயம். சபாநாயகர் நடுநிலையாக செயல்பட மறுக்கிறார்.
எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அடிப்படையில் சட்டசபையில் இருக்கை ஒதுக்க வேண்டும். ஆனால் சட்டசபையில் அ.தி.மு.க.வினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது. மு.க.ஸ்டாலினின் ஆலோசனை கேட்டு சபாநாயகர் செயல்படுகிறார்.
இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து போய் விட்டது. பொதுமக்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எதிர் கட்சிகளை ஒடுக்குகின்ற நிலையிலேயே தான் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க.வை முடக்க வேண்டும், சிதைக்க வேண்டும் என்று எண்ணுகிறார். ஸ்டாலின் உங்கள் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது. ஆகவே எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்.
இந்த விவகாரம் தொடர்பாக, நீதிமன்றத்திலே வழக்கு இருப்பதாக சொல்கிறார். இது உண்மைக்கு மாறான பொய். சட்ட பேரவை தலைவர் உண்மையை மறைத்து பேசுகிறார். நீதி மன்றத்திலேயே வழங்கப்பட்ட தீர்ப்பு எல்லா ஊடகத்திலும், பத்திரிகையிலும் வந்து உள்ளது. ஆனால் சட்டபேரவை தலைவர் அதை மறைக்கிறார். ஏனென்றால் ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக அவர் செயல்படுகிறார். இது பச்சையாக தெரிகிறது. ஸ்டாலின் வேண்டுகோளுக்கு இணங்க சபாநாயகர் செயல்படுகிறார்.
ஏனென்றால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர் ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன். இப்படி இருக்கின்றபோது ஆதாரத்தை, தீர்ப்பை நாங்கள் இணைத்து சபாநாயகரிடம் கொடுத்து விட்டோம். ஆனால், சபாநாயகர் வேண்டுமென்றே திட்டமிட்டு அரசியல் ரீதியாக இன்றைக்கு செயல்படுகிறார் என்பது தான் வெட்ட வெளிச்சம் என்றார்.
இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் பகல் உணவைத் தவிர்த்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு கூறினார்.