கமுதி : பழனிசாமியும் வேண்டாம். பன்னீர்செல்வமும் வேண்டாம். தங்க கவசம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தந்தது. அதனால் நானே எடுத்து செல்ல அனுமதி கேட்பேன்,” என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் தெரிவித்துள்ளார்.
பசும்பொனில் தேவரின் 60வது குருபூஜை மற்றும் 115வது ஜெயந்தி விழா அக்., 28, 29, 30 ல் நடக்கிறது. அங்குள்ள தேவர் சிலையை மெருகூட்டும் வகையில், கடந்த 2014ம் ஆண்டு, அ.தி.மு.க., சார்பில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 13.5 கிலோ தங்க கவசம் செய்து கொடுத்தார். இந்த கவசம் குருபூஜை விழாவிற்கு முன் முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டு பின் மதுரை அண்ணாநகரிலுள்ள வங்கியில் ஒப்படைக்கப்படும்.
ஆனால், தற்போது அதிமுக இரண்டாக பிளவுபட்டு இருப்பதால், வங்கியில் உள்ள தங்கக்கவசம் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அ.தி.மு.க., சார்பில் வங்கியில் வைக்கப்பட்டுள்ள தங்க கவசத்தை எடுக்க உரிமை கோருவதில் பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பினர் மாறி மாறி வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, இரு நாட்களுக்கு முன் பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், தங்களுக்கு ஆதரவு தருமாறு தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் உரிமை கோரினர். அதுபோல ஓபிஎஸ் தரப்பும் ஆதரவு கோரியதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், பசும்பொன் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேவர் பெருமகனாருக்கு பொருத்தப்படும் தங்க கவசம் வைக்கப்பட்டுள் வங்கி லாக்கர் சாவி என்னிடம் உள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு இபிஎஸ் தரப்பில் தம்மிடம் முறையிட்டுள்ளதாகவும், ஓபிஎஸ் தரப்பில் யாரும் தம்மை அணுகவில்லை. இரு நாட்களுக்கு முன் என்னிடம் வந்த முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் இதற்கு முன் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வந்தவர்கள் தான். தற்போது அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்னையில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது,
தற்போது பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவரும் வேண்டாம். ஒருவரை விட்டு ஒருவரை வைத்து எடுத்தால் நன்றாக இருக்காது. அதே நேரத்தில் தேவர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதாலும், இரு தரப்பும் சண்டையிட்டு வருவதாலும், இரு தரப்பும் வேண்டாம் என்றும் தாமே அதனைப் பெற்று தேவருக்கு அணிவிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், ஜெயலலிதா தான் தங்க கவசம் வழங்கினார். அதனால் நானே எடுத்துச் செல்கிறேன் என்று கேட்கப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
காந்தி மீனாள் யார்?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தந்தை உக்கிரபாண்டிய தேவரின் உடன் பிறந்த சகோதரி மீனாள். இவருடைய மகன் தங்கவேல் தேவர் (தேவருக்கு மைத்துனர் உறவுமுறை). தங்கவேல் தேவரின் மகள் காந்தி மீனாள் நடராஜன் (தற்போதைய வாரிசு). பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 1963 ஆம் ஆண்டு மறைந்தவுடன் காந்தி மீனாளின் தந்தை தங்கவேல் தேவர் பசும்பொன்னில் தேவருக்கு நினைவிடம் அமைத்தார். அன்றிலிருந்து 1973 ஆம் ஆண்டு வரை தங்கவேல் தேவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தேவர் நினைவாலயத்தை பராமரித்தும், பாதுகாத்தும் வந்தனர்.
1973 ஆம் ஆண்டு முத்துராமலிங்க தேவரின் மைத்துனரான தங்கவேல் தேவர் காலமானார். அவரது மறைவுக்கு பின்னர் தங்கவேல் தேவர் மகள் காந்தி மீனாள் நடராஜன் (தேவரின் மருமகள்) மற்றும் அவரது உறவினர்கள் தற்போது வரை பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலயத்தை பாதுகாத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.