டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு கார்கே, சசிதரூர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், கட்சிக்குள் மாற்றம் வேண்டுமானால் எனக்கு வாக்களிக்கலாம் சசி தரூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏற்கனவே கட்சியில் கார்கே வெற்றி பெற்றால், அவர் காந்தி குடும்பத்தைச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலை உருவாகும் என கூறியிருந்த நிலை யில், தற்போது, கட்சிக்குள் மாற்றம் வேண்டுமானால் எனக்கு வாக்களிக்கலாம் என்று காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு சசி தரூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்கு சேகரிக்கும் பணியில் போட்டியாளர்களான மல்லிகார்ஜுன கார்கேவும், சசிதரூர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சசி தரூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் தேர்தல் எதுவும் நடத்தப்படாததால் அமைப்பில் சில சில குறைபாடுகள் உள்ளன. அது சரிசெய்யப்பட வேண்டும்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாற்றத்துடன் செல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா, தற்போதைய நிலையில் நீங்கள் திருப்தி யடைகிறீர்களா? என காங்கிரஸ் கட்சியினருக்கு கேள்வி எழுப்பியவர், எல்லாம் சரியாக உள்ளது என்று நீங்கள் நினைத்தால் எனக்கு வாக்களிக்க வேண்டாம்.
ஆனால், 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நம்முடன் இருக்காத வாக்காளர்களை மீண்டும் கட்சிக்கு கொண்டு வரும் மாற்றத்தை நான் விரும்புகிறேன். அதனால் நீங்கள் மாற்றத்தை விரும்பினால் எனக்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.