சேலம்: மேட்டூரில் நீர் வரத்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து இன்னும் அதிக அளவு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, காவிரி கரையோர 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்ப இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை மற்றும், தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டம் உள்பட பல மாவட்டங்களில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நடப்பாண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது.
இதனால், அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி அணையிலிருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஆனால், அணைக்கு நீரின் வரத்து 50ஆயிரம் கனஅடியை தாண்டி வந்து கொண்டிருப்பதால், மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வரை திறந்து விட அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இதனால் காவிரியில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், கரையோர மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவிப்பு விடப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் உடைமைக்கும் உயிருக்கும் இழப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யுமாறு காவிரி கரையோர மாவட்டங்களைச்சேர்ந்த 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.