சென்னை: தலைமைச்செயலகத்தில் இருந்து கோவில்பட்டி பள்ளிக்கட்டடத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர், சென்னை பெருநகரப் பகுதி எல்லை விரிவாக்கம் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், இடைசெவல் ஊராட்சியில், கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் திரு. கி. ராஜநாராயணன் அவர்களின் நினைவாக 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கட்டடத்தை திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் சென்னை பெருநகரப் பகுதி எல்லை விரிவாக்கம் குறித்து ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, பெரிய கருப்பன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.