சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் மதிப் பெண் வழங்குவது தொடர்பாக தேர்வு துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் அசல் சான்றிதழ் 14ந்தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொதுமுடக்கத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் 2வருடங்களுக்கு பிறகு கடந்த 2022 – 2023ம் கல்வியாண்டில்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. இந்த நிலையில் 10,11ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. இதனையடுத்து விரைந்து பாடங்கள் நடத்தி முடிக்கபட்டு அட்டவணையின் படி கடந்த மே மாதம் தேர்வுகள் தொடங்கி அம்மாத இறுதி வரை நடைபெற்றது. அதனைதொடர்ந்து கடந்த 20ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மட்டும் 90.07% பேர் தேர்ச்சி பெற்றனர். அடுத்தாக 12ம் வகுப்பில் 93% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் வெளியான பிறகு ஆகஸ்ட் மாதம் தேர்வில் தோல்வியுற்ற மற்றும் பங்கேற்காத 10ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத் தேர்வுகள் நடைபெற்றது.
இந்த நிலையில் மாணவர்கள் உயர் கல்வியில் சேர ஏதுவாக இணையதளம் வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தற்போது பொதுத்தேர்வு, துணைத்தேர்வு ஆகியவற்றின் முடிவுகள் வெளியிடப்பட்டு, மறு கூட்டல், விடை நகலுக்கு விண்ணப்பித்தல் போன்ற பணிகள் நிறைவடைந்ததை அடுத்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கபடவுள்ளது.
அதன்படி, வரும் அக்டோபர் 14ம் தேதி முதல் காலை 10மணி முதல் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.