கோவை: கோவை பிரஸ் காலனியில் உள்ள ஒருவிட்டில் பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டிருந்த ரூ.2,000 கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் போலி நோட்டுக்கள் நடமாடுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து, சந்தேகத்துக்கிடமான நபர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த போது அங்கு பெட்டி பெட்டியாக ரூ.2,000 கள்ள நோட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அங்கிருந்த 9 அட்டை பெட்டிகளில் கட்டு கட்டாக ரூ.2000 கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், கள்ளந்நோட்டை புழக்கத்தில் விட முயன்ற நபர்கள், இரிடியம் என கூறி மோசடி செய்யும் கும்பல் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் பிரத்யேகமான தாள்களை பயன்படுத்தி ரூபாய் நோட்டுகளை கலர் பிரிண்டர் வைத்து தயார் செய்து இருப்பதும், டாஸ்மாக் கடை உள்ளிட்ட பல்வேறு கூட்டம் மிகுந்த இடங்களில் இந்த நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருப்பதும் தெரியவந்தது. மேலும் ஒரிஜினல் ரூபாய் தாள்களை வாங்கிக்கொண்டு போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்திருக்கலாம் எனவும், கைதான கும்பல் நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கைவரிசை காட்டியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கள்ள நோட்டுகள் கட்டக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.