மதுரை: கடவுளை வழிபடுவது அவரவர் நம்பிக்கையின்படியான உரிமை என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அறநிலையத்துறை வழக்கை விசாரித்த நீதிபதி கூறினார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே மேலநேசநேரியில் வாலகுருநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோவில் விழா நடத்துவதில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் 12 ஆண்டுகளாக  கோவில் மூடப்பட்டுள்ளது. இக்கோயிலை மீண்டும் திறக்க அறநிலையத் துறை அதிகாரி உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அறநிலையத்துறை அதிகாரியின்  அறிவிப்பை ரத்து செய்யக் கோரி சீனி என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு , ‘‘2011ல் கோயிலை நிர்வகிக்க தகுதியான நபர் (அதிகாரி) நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் இதுவரை கோவில் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும், இந்த கோயிலை அறநிலையத்துறை ஏற்பது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வெளியிடவுமில்லை. ஆனால், தற்போது திடீரென அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஏற்புடையதல்ல. எனவே, கோயிலை திறப்பது தொடர்பான அறநிலையத்துறையின் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

மேலும்,  கடவுளை வழிபடுவது ஒவ்வொரு தனிநபருக்கும் அவரவர் தனிப்பட்ட நம்பிக்கை. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. இந்த கோயில் பிரச்னை தொடர்பாக அறநிலையத்துறை இணை ஆணையர் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி 6 மாதத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.