மதுரை: மதுரையிலிருந்து துாத்துக்குடிக்கு போலீஸ்காரரை இட மாறுதல் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை, கர்மா கொள்கைப்படி ரத்து செய்வதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
மதுரையில் போலீஸ்காரராக பணியாற்றும் ஸ்ரீமுருகன் என்பவர் தூத்துக்குடிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், காவல் துறையில் 2003ல் இரண்டாம் நிலை போலீஸ்காரர் பணியில் சேர்ந்தேன். அவனியா புரம் ஸ்டேஷனில் எழுத்தராக பணி புரிந்தேன்.என்னை துாத்துக்குடி மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்து, தென் மண்டல போலீஸ் ஐ.ஜி., மற்றும் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டனர்; இதை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்
இந்த வழக்கை தனி நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்து வந்தார். விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில், ’18 மாதங்களில் நான்கு இடமாறுதல் உத்தரவுகளை எதிர்கொண்டேன். ‘இடமாறுதல் தற்செயலாக இருந்தாலும், துாத்துக்குடிக்கு இட மாற்றம் செய்தது உள்நோக்கம் கொண்டது; அதை ரத்து செய்ய வேண்டும்’ என தெரிவித்தார்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் உயரதிகாரிகளை மதிப்பதில்லை; அவர்களுக்கு எதிராக செயல்பட்டார்; பழிவாங்கும் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறார்’ என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனுதாரர் ஏற்கனவே தண்டனையை அனுபவித்து, மிகக்குறைந்த சம்பளம் பெறுகிறார். கர்மாவின் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம், இந்த நீதிமன்றம் மனுதாரருக்கு நிவாரணம் வழங்க முன்வருகிறது கர்மாவின் கொள்கைகளில் ‘சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா’ எனப் பிரிக்கப்பட்டு, பிராரப்த கர்மாவிற்கு மட்டுமே தண்டனை விதிக்கப்படுகிறது என்று கூறி, அவரது பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்தார். மேலும், மனுதாரரை தொலைதுார இடத்திற்கு மாற்றுவது பொருளாதார ரீதியாக துயரத்தை அதிகரிக்கும். எனவே, மனுதாரருக்கு எதிரான இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவரை போக்குவரத்து காவலராக மதுரை மாவட்டத்தில் நியமிக்க, ஐ.ஜி., மற்றும் போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடப்படுகிறது என உத்தரவிட்டார். இது சர்ச்சையானது.
இதை எதிர்த்து காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, கர்மா அடிப்படையில் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.