சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை தொடர்பான வழக்கின் இன்றைய விசாரணையின்போது, மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்க மாணவியின் பெற்றோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசரணையின்போது, மாணவி இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், சிபிசிஐடி விசாரணை சரியில்லை என்றும் அவரது தாய் தொடர்ந்து குற்றச் சாட்டுக்களை கூறி வருகிறார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக அவரது தாய் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என சிபிசிஐடி காவல்துறையினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலும், மரபணு சோதனைக்கு மாதிரிகளை தர மாணவியின் பெற்றோர் மறுக்கிறார்கள், மாணவி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்ய கேட்டபோதும் தர மறுக்கிறார்கள் என்றும் சிபிசிஐடி குற்றம் சாட்டியது.
இதையடுத்து, மாணவி பயன்படுத்திய மொபைல் போனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று, மாணவி மரண வழக்கு தொடர்பாக அடுத்தகட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடி-க்கும் நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 30ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.