கொல்லம்: ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கட்சியை வலுப்படுத்தவும், பாஜகவுக்கு எதிராகவும் பாரத் ஜோடோ பாதயாத்திரை என்ற பெயரில் ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரையானது தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இன்று 14வது நாளாக கொச்சி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், கொல்லம் முகத்தலாவைச் சேர்ந்த கே.விஜயன் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், இந்திய ஒற்றுமை யாத்திரையால் சாலை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது/ இதுபோன்ற யாத்திரையை நடத்துவதன் மூலம் பொதுச் சாலைகள் வழியாக வாகனங்கள் செல்வதற்கு இடையூறு விளைவிப்பது சட்டவிரோதமானது. யாத்திரை மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் சி ராஜேந்திரன் மூலம் தாக்கல் செய்த மனுவில் மனுதாரர் கோரியுள்ளார்.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ் மணிக்குமார் மற்றும் நீதிபதி ஷாஜி பி சாலி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் வியாழக்கிழமை (22ந்தேதி) விசாரணையின் போது மனுவை பரிசீலிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது ஐகோர்ட்டில் நாளை விசாரணை நடைபெற உள்ளது இந்த மனுவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கேரள பிரதேச காங்கிரஸ் தலைவர் சுதாகரன் ஆகியோர் பதிலளிக்க உள்ளனர்.