கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 21

பா. தேவிமயில் குமார்

சமையலறை சக்திகள்

வெளியில் வர துடிக்கிறேன்
விரட்டுகிறது….
மீண்டும் குடும்பத்தாரின் பசி!

பிடிக்கவில்லை என்றாலும்
பிடித்தது போல, என்
பாத்திரத்தை மாற்றி கொள்கிறேன்!

கடுகு வெடிக்கையில்
காணாமல் போகிறேன்,,,,,
நினைவுப் புகையில்!

துவரம் பருப்ப, உளுத்தம் பருப்பு…
என்றே துதி பாடி
உளுத்து போகிறேன்!

அடுப்பின் சூட்டில்
என் கண்ணீர் இன்னும்…. நீர்த்து
போகிறது!

ஏட்டுக் கறி
சமையலுக்கு… உதவுகிறது..
என் வீட்டில், நான் வாங்கிய
முது கலை படிப்பால்!

கேசரி கிண்டும் போது,
கலர் தரும் வேதிப் பொருள்
என்னவென படிக்கிறது …
பின்னோகியபடியே!

கறியும் மீனும்
காய் கறியும்
கசக்கிறது….
காலம், காலமாய்
அடைபட்டு கிடக்கும்
ஆத்திரம், எதுவும்
ருசிக்கவில்லை!

பிடிக்கவில்லை என்றாலும்
அரிசியும், கோதுமையும்
என்னிடமே நட்பு பாராட்டுகிறது!

இல்லத்தரசி பட்டம்
எதற்கு?
இல்லதரசன் பட்டம்
கூட கொடுக்கலாமே?
வாங்கிட ஆளில்லை …….

வால்கா முதல் கங்கை
வரை தாய் வழி
சமூகமாக
ஆட்சி செய்த என்னை…
ஒரு சமையலறை
ஒடுக்கி வைத்தது
நீ பெண்ணென்று…..