சென்னை; நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை; சனாதனத்திற்கு எதிரானவர்கள், அதனால் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? என திமுக எம்.பி. ராசா மீண்டும் கேள்வி எழுப்பி உள்ளார்.

தி.மு.க இலக்கிய அணி மற்றும் நிகிதா பதிப்பகம் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தீரமிகு மடல்கள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராஜ கண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசும்போது, திமுகவை அழிக்க நினைத்தவர்கள் நிலை என்ன என்பதை நான் சொல்ல தேவை யில்லை. குடும்ப கட்சி என்று சொன்னவர்கள் இன்று கோர்ட்டில் நிற்கின்றார்கள். சமதர்மத்தை நாட்டிலே நிறுவுவதற்கு பாடுபட்ட இயக்கம் திராவிட இயக்கம். இனிமேல் பொதுக்கூட்டம் நடத்தினால் கழக வரலாறை பேச வேண்டும். இன்று உள்ள தமிழனிடம் சொரணை போய்விட்டது. ஆ ராசா பேசியதை மிகப்பெரிய குற்றம் என ஒரு கூட்டம் எதிர்க்கிறது. ராசாவின் பேச்சை எந்த பிராமணரும் எதிர்க்கவில்லை, யாருக்காக இத்தனை ஆண்டுகாலம் போராடினோமோ அவர்கள் தான் எதிர்க்கிறார்கள் என்றார்.

இதனையடுத்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா, ஸ்டாலின் நல்லாட்சி தருவார் என்று எல்லோருக்கும் தெரியும். திராவிடக் கொள்கையை கொண்டு சேர்ப்பாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது, ஏன் கருப்புசட்டை போட்ட எல்லோருக்கும் இருந்தது. ஆனால் அவர் திராவிட மாடல் ஆட்சிதான் செய்கிறார் என்றார். மேலும் சாராயம் குடிப்பது தப்பில்லை குடிப்பவன் கெட்டவன் இல்லை என்ற அவர் ஒரு லட்சியத்திற்காக நல்லவனாக இருக்க வேண்டும் என்றார்.

கார்ல் மார்க்ஸ் சாராயம் குடிப்பார் அவரை குடிகாரர் என்று கூற முடியுமா? அவரின் ததத்துவத்தை தான் நாம் பார்க்க வேண்டும் என்றவர், பெரியார் திடலில் முதல்வர் பேசினாலும் ஆ ராசா பேசினாலும் விமர்சனம் செய்கிறார்கள். தற்போது என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். நான் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன். மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறுகிறவன் மனிதனே இல்லை. ஆனால் நான் எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என கேள்வி எழுப்பியவர், இந்துக்கள் இரண்டுவகை ஒன்று சனாதனத்தை பின்பற்றுபவர்கள் மற்றொன்று அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்றுபவர்கள்.

ஆளுநர் பதவி ஏற்கும் போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டுதான் ஆளுநராக பதவியேற்றார். அரசியல் சட்டத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ரவி ஏன் சனாதனம் பேசுகிறார். அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஏன் சனாதன தர்மத்தை பேச வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.

சனாதனம் தர்மம் என்பது வேதத்தின் அடிப்படையிலும்,புனித புத்தகங்களின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது என்றும்  ஆரியர்களாலும் ,ஆரிய மரபினத்தவரால் கொண்டுவரப்பட்டது  என விமர்சித்தார்.