நெல்லை: சங்கரன்கோவில் அருகே தீண்டாமை பிரச்சினை காரணமாக மாணவர்களுக்கு தின்பண்டம் தர மறுத்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்ததுடன், ஒருவரை கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. அங்கு வசிக்கும் பட்டியலின மாணவர்களுக்கு அங்குள்ள மற்றொரு சாதியை சேர்ந்தவரின் பெட்டிக் கடையில், தின்பண்டம் தர மறுக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலானது. அந்த வீடியோவில், பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுவர்கள் தின்பண்டம் வாங்குவதற்காகக் கடைக்கு வருகின்றனர். அவர்களிடம் கடை உரிமையாளர், ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாகவும் இனி உங்களுக்கு தின்பண்டம் தர முடியாது என்று மறுத்துவிடுவதுடன், இதுதொடர்பாக உங்கள் வீட்டில் சென்று சொல்லுமாறும் கூறுகிறார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட கரிவலம் வந்த நல்லூர் காவல்துறையினர், ராமச்சந்திர மூர்த்தி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, அந்த பெட்டிக்கடைக்கு சீல் வருவாய்த்துறையினர் சீல் வைத்துள்ளனர்.
இந்த விவகாரம் சர்ச்சையானதும், கடை உரிமையாளர் மகேந்திரன் தலைமறைவாகி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக கிராமத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட ஒரு பிரச்னை தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், அங்கு தற்போது மீண்டும் தீண்டாமை பிரச்சினை எழுந்துள்ளது.