கரூர்: இந்தி தினத்தை எதிர்த்து கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் போராட்டம் நடத்தினார். அதுபோல வாட்டாள் நாகராஜ் தலைமையில்,  கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

செப்டம்பர் 14ந்தேதியான இன்று  இந்தி திவாஸ் கொண்டாடப்படுகிறது. இந்தியை தேசிய மொழியாக அறிவித்துள்ள பாஜக அரசு, அதை நாடு முழுவதும் பயன்படுத்தும் வகையில், இந்தி திணிப்பு செய்து வருகிறது. இதற்கு பல மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இன்று இந்தி திவாஸ் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு உள்பட பல பகுதிகளில் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான   கன்னட அமைப்பினர் மற்றும் ஜேடி (எஸ்) தலைவர்கள் பெங்களூருவில் போராட்டம் நடத்தினர். கர்நாடக சட்டமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்தியை திணிக்கும் பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிராக பதாகைகள் ஏந்தி முன்னாள் முதல்வர் குமாரசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  நாகராஜ் , “கர்நாடகாவில் கன்னடம் நிர்வாக மொழியாக இருக்க வேண்டும், கர்நாடகாவில் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பாஜகவும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கமும் (ஆர்எஸ்எஸ்) இந்தியின் ‘ஏஜெண்டுகள்’ மற்றும் ‘அடிமைகள்’ என்று விமர்சித்தார். “கர்நாடக அரசு இந்திக்கு அடிமை. பொம்மைக்கு பெருமை இருந்தால், டெல்லியில் இருந்து வருபவர்களுக்கு கன்னடத்தில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்சிகளுக்கு கன்னட மொழி மீது எந்தப் பெருமையும் இல்லை, அதனால் மாநிலத்தில் ஹிந்தியை திணிக்கிறார்கள்” என்றும்,  ‘கன்னட மக்கள்’ மாநிலத்தில் அரசு பதவிகளில் இந்தி அதிகாரிகளை விரும்பவில்லை என்று கூறினார்.

ஜனதா தளம் (மதச்சார்பற்ற) தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி உட்பட பல அரசியல் தலைவர்களுக்கு இந்த கொண்டாட்டம் பிடிக்க வில்லை. முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு எழுதிய கடிதத்தில், இந்தி திவாஸை வலுக்கட்டாயமாக கொண்டாடுவது கர்நாடக மக்களுக்கு அநீதி இழைக்கும் செயலாகும் என்றார்.  “செப்டம்பர் 14-ம் தேதி மத்திய அரசு வழங்கும் ஹிந்தி திவாஸ் நிகழ்ச்சியை கர்நாடகாவில் வலுக்கட்டாயமாக கொண்டாடுவது, மாநில அரசு கன்னடர்களுக்கு இழைக்கும் அநீதியாகும். எந்த காரணத்திற்காகவும் கர்நாடக அரசு மாநிலத்தின் வரி செலுத்துவோர் பணத்தைப் பயன்படுத்தி இந்தி திவாஸைக் கொண்டாடக்கூடாது” என்று கேட்டுக்கொள்கிறேன் என குமாரசாமி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.