திருச்சி: ராணி மங்கம்மாள் உட்பட மன்னர்கள், வக்பு வாரியத்திற்கு இனாமாக கிராமங்களை வழங்கியுள்ளதாகவும், இதனால் ‘இனாம் கிராமம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக வக்பு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் மக்கள் சொத்துக்களை வாங்கவோ விற்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வஃபு வாரியத்தின் இந்த திடீர் அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலேயே இதுபோன்ற தடைகள் நீக்கப்பட்டு, யாரும் நிலம் வாங்கலாம் விற்கலாம் என சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் வஃபு வாரியத்தின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
தமிழ்நாடு வக்ஃப் வாரியம் என்பது இஸ்லாமியர்களுக்கான வக்ஃப் சட்டம் 1954 இன் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது வக்ஃப் நிறுவனங்களை மேற் பார்வையிடுகிறது மற்றும் நிர்வகிக்கிறது மற்றும் வக்ஃப் சொத்துக்களை நிர்வகிக்கிறது. வக்ஃப் சொத்துக்கள் என்பது இஸ்லாமிய சட்டத்தால் பக்தி, தொண்டு என்று அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நோக்கத் திற்காகவும் இஸ்லாம் என்று கூறும் நபரால் அர்ப்பணிக்கப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ஆகும்.
இந்த நிலையில், திருச்சி அருகே உள்ள திருச்செந்துறை கிராமத்தில் விவசாய நிலம் வைத்திருக்கும் ஒருவர், அதை மற்றொருவருக்கு விற்பனை செய்ய முயன்றால். இதற்கான கிரயம் செய்யப்பட்டு ரெஜிஸ்டர் செய்ய முயன்றபோது, அதை பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளர், அந்த சொத்து வஃபு வாரியத்துக்கு சொந்தமானது தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த நிலமானது 1992ல் மற்றொருவரிடம் விற்ப முயன்ற நபர் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ள சார்பதிவாளர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி இந்த கிராமத்தில் தான் மிகவும் பழமையான சந்திரசேகர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் 1,500 ஆண்டுகள் பழமையானது என பல்வேறு ஆவணங்கள் மற்றும் சான்றுகள் கூறுகின்றன. திருச்செந்துறை கிராமத்தின் உள்ளேயும், வெளியேயும் 369 ஏக்கர் நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கையில், இந்த கிராமமே வஃபு வாரியத்துக்கு சொந்தமானது என்பது எப்படி என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இதுதொடர்பாக பாஜகவினர், மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், வஃபு வாரியம் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. வக்பு வாரியம் தலைமை நிர்வாக அலுவலர் ரபியுல்லா கடந்த மாதம் 18ம் தேதி அன்று, வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துகளின் விவரங்களை பட்டியலிட்டு, அந்த சொத்துக்களை வாங்கவோ விற்கவோ அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். அதன்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள, 12 துணை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இந்த கடிதம் வந்துள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ளபடி, திருவெறும்பூர் சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட கும்பக்குடி, அரசகுடி, கே.சாத்தனூர் துணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட சூரியூர், குண்டூர் மற்றும் திருச்சி இணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட திருச்செந்துறை ஆகிய கிராமங்கள் வக்பு வாரியத்தின் சொத்துகளாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இதனால், திருச்சி மாவட்டத்தில், 6 கிராமங்களில் வசிக்கும் மக்கள், சொத்துக்கள் வாங்கவோ, விற்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் வக்பு வாரிய தலைமை செயல் அலுவலர் ரபியுல்லா, ராணி மங்கம்மாள் உட்பட மன்னர்கள், திருச்சி அருகே 6 கிராமங்களை வக்பு வாரியத்திற்கு இனாமாக கிராமங்களை வழங்கியுள்ள தாகவும், இதனால் ‘இனாம் கிராமம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலங்கள் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட கிராம மக்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணுங்கள் என்றும் கூறியுள்ளார்.
இத்தனை வருடங்களாக இதுபோன்ற ஒரு சர்ச்சை எழாத நிலையில், தற்போது, வஃபு வாரியத்தின் திடீர் கடிதம் மற்றும் அறிவிப்புகள் பொதுமக்களிடையே பரபரப்பையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.