கோவை: ஒரே அறை அறையினுள் இரு கழிப்பறை கட்டிய கோவை மாநகராட்சி மற்றும் அரசு அதிகாரிகளின் செயல்பாடுகளை நெட்டிசன்கள் கடுமையாக வறுத்தெடுத்து வந்த நிலையில், சர்ச்சைக்குள்ளான அந்த கழிப்பறையை , ஆண்கள் சிறுநீர் கழிக்கும் இடமாக மாற்றி அமைத்தள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் அம்மன்குளம் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கழிப்பறை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதில் ஓரே கழிவறையில் இரண்டு பேர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் வகையில் லெட்டின் செட்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதோடு கழிவறைக்கு கதவுகளும் இல்லை. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. அதிகாரிகள் மெத்தனத்தால் திமுக அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டது. சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் மெத்தனமே இதற்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கு விளக்கம் அளித்த கோவை மாநகராட்சி அதிகாரிகள், சிறுவர்கள் பயன்படுத்துவதற்காகவே இவ்வாறு கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், சிறுவர்கள் உள்ளே சென்று தாழிட்டு கொள்ளக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக இவ்வாறு கதவு இல்லாமல் அமைக்கப்பட்டதாக பலே விளக்கம் அளித்தனர். ஆனால், இவ்வாறு சுகாதரமாகும் என சமூக ஆர்வலர்களும், நெட்டிசன்களும் மேலும் கடுமையாக விமர்சித்தனர். அடிப்படை அறிவுகூட இல்லாத இவர்கள் எப்படி சுகாதாரத்துறைக்கு பணிக்கு வந்தார்கள் என கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர்கள், இதை ஆய்வு செய்ய வேண்டிய உயர் அதிகாரிகளும், மாநகராட்சி ஆணையரும் எங்கே போனார்கள் என்று அவர்களையும் கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில், தற்போது, கோவை மாநகராட்சி நிர்வாகம் அந்த கழிப்பறையை சீரமைத்து சிறுநீர் கழிவறையாக மாற்றியது. இந்த சிறுநீர் கழிப்பறைகள் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது.