1926 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் உள்ள மேஃபேரில் பிறந்த எலிசபெத் தனது தந்தை ஜார்ஜ் VI மறைவுக்குப் பின் 1952 ம் ஆண்டு பிப்ரவரி 6 ம் தேதி இங்கிலாந்தின் ராணியாக பதவியேற்றார்.

சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியமாக விளங்கிவந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட போது தனது தந்தைக்கு உதவியாக அரச விவகாரங்களை கவனிக்க தொடங்கிய எலிசபெத் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் சரிந்து காமென்வெல்த்தாக மாறியது முதல் அந்நாட்டின் ராணியாக இருந்து வந்தார்.

பிரான்சின் மன்னர் லூயிஸ் XIV க்கு அடுத்தபடியாக அதிக நாட்கள் ஆட்சியில் இருந்த உலகின் இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்ற ராணி எலிசபெத் ஆட்சிக் காலத்தில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சிக்கன நடவடிக்கை தொடங்கி, காமென்வெல்த்தாக உருவெடுத்தது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது மற்றும் வெளியேறியது, பனிப்போரை முடிவுக்கு கொண்டுவந்தது என்று பல்வேறு முக்கிய நிகழ்வுகள் அரங்கேறின.

தனது ஆட்சிக்காலத்தில், 1874 ல் பிறந்த வின்ஸ்டன் சர்ச்சில் தொடங்கி 1975 ல் பிறந்த லிஸ் ட்ரஸ் வரை 15 பிரதம மந்திரிகளுடன் பணியாற்றியுள்ளார்.

இளவரசர் பிலிப்-பை 1947 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட எலிசபெத் இளவரசர் சார்லஸ், இளவரசி அன்னே, இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசர் எட்வர்ட் ஆகிய நான்கு குழந்தைகளுக்கு தாயானார்.

இளவரசர் பிலிப் 2021 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது 99 வது வயதில் காலமானார்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் 70 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்த விழாவில் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருந்த ராணி எலிசபெத் ஒரு சில நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்றார்.

தனது பதவிக்காலத்தில் 13 அமெரிக்க ஜனாதிபதிகளுடன் பணியாற்றிய ராணி எலிசபெத், அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜான்சனை தவிர மற்ற 12 பேரை சந்தித்துள்ளார்.

ராணி எலிசபெத் இன்று மரணமடைந்ததைத் தொடர்ந்து அரச பொறுப்பை ஏற்றுள்ள பிரின்ஸ் சார்லஸ் நாளை முதல் அதிகாரபூர்வமாக அரசு நடவடிக்கைகளில் செயல்படுவார்.

ஏற்கனவே 1625 முதல் 1649 வரை ஆட்சி செய்த மன்னர் சார்லஸ் I மற்றும் 1660 முதல் 1685 வரை 25 ஆண்டுகள் ஆட்சி செய்த இரண்டாம் சார்லஸ் மன்னருக்குப் பிறகு மூன்றாவதாக பொறுப்பேற்றுள்ள இளவரசர் சார்லஸ், சார்லஸ் III மன்னராக அழைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவரது முழுப் பெயரான சார்லஸ் பிலிப் ஆர்தர் ஜார்ஜிலிருந்து வேறு எந்த கிறிஸ்தவ பெயரையும் பயன்படுத்தி இளவரசர் தனது சொந்த விருப்பத்தை தேர்வு செய்யலாம் என்று தெரிகிறது.

இங்கிலாந்தின் மகாராணி எலிசபெத் காலமானார்… அரசராக பொறுப்பேற்றார் பிரின்ஸ் சார்லஸ்