சென்னை: அரசு நிலத்தையும், நீர்நிலைகளையும், ஆக்கிரமித்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கட்டிடங்களை கட்டியுள்ளதற்கு எதிரான வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26ந்தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

அரசு சிறைக்காக ஒதுக்கிய நிலத்தையும், நீர்நிலைகளையும் ஆக்கிரமிதுது, பல்வேறு கட்டிடங்களை கட்டி,  தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் கிராமத்தில் உள்ள  சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.   இந்த நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகம்  ஆக்கிரப்பு செய்தபோது, அப்போது  ஆட்சியில் இருந்த அரசும், அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆக்கிரமிப்பு பகுதியல் ஏராளமான கட்டிங்களை கட்டி வகுப்புகளை நடத்தி வருகிறது.

தற்போது அந்த இடங்களை மீட்க தமிழகஅரசு போராடி வருகிறது. அதாவது சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, நிலத்தை மீட்க தமிழகஅரசு முயற்சித்து வருகிறது. ஆனால், சாஸ்த்ரா பல்கலைக்கழகம், அதற்கு பதிலாக வேறு இடம் தருகிறோம் என்று கூறுவதுடன், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என கூறி மறுப்பு  தெரிவித்து வருகிறது.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் பகுதி நீர்நிலைதான் என்பதை நிரூபிக்கும் வகையிலான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து வாதாடிய அரசு வழக்கறிஞர்,  தஞ்சை சாஸ்த்ரா பல்கலை. நீர்நிலையை ஆக்கிரமித்துள்ளது வருவாய் ஆவணங்களின்படி 100% உறுதியாகியுள்ளது என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற வாதங்களைத் தொடர்ந்து, வழக்கை செப்டம்பர் 26ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.